தி.மு.க தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வளாகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. தி.மு.க-வில் முக்கிய பதவியாக கருதப்படும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களுக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் தி.மு.க தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயம் வளாகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க-வில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் செல்லத்துரை மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் தற்போது தி.மு.க தென்காசி மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார். ஆனால், தி.மு.க தலைமை தற்போது தென்காசி தொகுதி எம்.பி-யாக இருக்கக்கூடிய தனுஷ்குமாருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை அளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், கோபம் அடைந்த செல்லத்துரையின் ஆதரவாளர்களான தி.மு.க தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலரும் அண்ணா அறிவாலயத்தில் திரண்டு செல்லத்துரைக்கு மாவட்ட செயலாளர் பதவியை அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தி.மு.க தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"