திருச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது பொதுத்தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்தல் நடந்து முடிந்து நிர்வாகிகளின் பெயரும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
திருச்சி மாநகரச் செயலாளர் பதவியை குறிவைத்து திருச்சி மாநகர திமுகவின் பகுதிகள் சீரமைப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்களின் அடுத்தடுத்த காய்நகர்த்தலால், உட்கட்சித் தேர்தல் சூடுபிடித்திருந்தது.
திருச்சி திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளுக்கு ஏற்றாற்போல் கட்சித் தலைமையும் பகுதி கழகம் குறித்து திருத்தத்துக்கு மேல் திருத்தம் அறிவித்தது. திருச்சி மாவட்ட திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாநகர திமுக ஒரே அமைப்பாக இருந்தது.
அதன்பின் வடக்கு, தெற்கு, மத்திய என 3 ஆக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டபோது மாநகரிலுள்ள 65 வார்டுகளில் 36 வார்டுகள் தெற்கு மாவட்டத்திலும், 29 வார்டுகள் மத்திய மாவட்டத்தின் கீழும் கொண்டு வரப்பட்டன.
அதன்பின்னர், மாநகர திமுக அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இருந்தபோதும், செயல்பாடுகள் ரீதியாக மத்திய, தெற்கு என நிர்வாகிகள் 2 பிரிவுகளாகவே இருந்து வருகின்றனர்.
திருச்சி மாநகர மேயராக உள்ள அன்பழகன் தற்போது மாநகரச் செயலாளராகவும் உள்ளார். இந்தச் சூழலில் திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தலுக்காக மாநகர திமுகவில் பகுதி சீரமைப்பு மேற்கொள்ள கட்சித் தலைமை அனுமதி வழங்கியது.
அதன்படி, அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கட்சித் தலைமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மத்திய மாவட்ட திமுகவில் ஏற்கெனவே இருந்த 5 பகுதிகள் அப்படியே தொடர்ந்தன. தெற்கு மாவட்ட திமுகவில் ஏற்கெனவே இருந்த 5 பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிதாக மார்க்கெட் பகுதி உருவாக்கப்பட்டது. இதன்மூலம் மாநகர திமுகவில் மத்திய மாவட்டத்துக்கு 5, தெற்கு மாவட்டத்துக்கு 6 என மொத்தம் 11 பகுதிகள் பிரிந்தன.
மார்க்கெட் பகுதி அமைச்சர் அன்பில் மகேஷ் கட்டுப்பாட்டில் சென்றது அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஷாக் கொடுத்ததாக அமைந்தது. உடனே தனது பரிவாரங்களை அழைத்து வறுத்தெடுத்திருக்கின்றார்.
இந்த சூழலில், மாநகரச் செயலாளர் மற்றும் மாநகர திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தால், அதில் பகுதி நிர்வாகிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற நிலையில் தெற்கு மாவட்டத்திற்கு கூடுதல் பகுதி உருவாக்கப்பட்டதால் அமைச்சர் அன்பில் மகேஷ் கை ஓங்கியிருக்கும் என நினைத்த அமைச்சர் நேரு தரப்பு தலைமையிடம் கொஞ்சம் இறுக்கம் காட்டவே, அவரை கூல் செய்ய தலைமை மத்திய மாவட்டத்திலும் 6 பகுதிகள் இருக்கும் வகையில், ஸ்ரீரங்கம் பகுதியை இரண்டாக பிரித்து புதிதாக திருவானைக்காவல் பகுதியை உருவாக்கி கட்சித் தலைமை மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக தெற்கு மாவட்டத்திலுள்ள 6 பகுதிகளில் இருந்து சில வார்டுகளை பிரித்து புதிதாக திருவெறும்பூர் பகுதியை உருவாக்கி, சமீபத்தில் மற்றொரு திருத்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைக்கு தெரிவித்து முரசொலியிலும் வெளியிட்டது. இதன்படி, தெற்கு மாவட்டத்தில் 7, மத்திய மாவட்டத்தில் 6 என்ற அடிப்படையில் பகுதிகள் அமைக்கப்பட்டு நிர்வாகிகளும் வெளியிடப்பட்டு விட்டனர்..
பகுதி சீரமைப்பு தொடர்பாக திமுக தலைமையில் இருந்து அடுத்தடுத்து வந்த திருத்த அறிவிப்புகள் திமுகவினரிடம் பெரும் குழப்பம் ஏற்படும் வகையில் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் மாநகரச் செயலாளர் தேர்தல் குறித்த விவாதத்தையும் கட்சியினரிடம் ஏற்படுத்தியது.
மாநகர திமுகவில் ஆதிக்கம் செலுத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்களுமே ஆர்வமாக இருந்தனர். மாநகராட்சி மேயர் தேர்தலின்போது இது அப்பட்டமாக வெளிப்பட்டது. கே.என்.நேரு தரப்பில் ஆரம்பத்திலிருந்தே மு.அன்பழகன் மேயர் வேட்பாளராக முன்வைக்கப்பட்டார். அமைச்சர் மகேஷ் தரப்பில் ஆரம்பத்தில் பகுதி செயலாளர் மதிவாணன், அதன்பின் முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன் என மாறி மாறி முன் நிறுத்தப்பட்டனர்.
இறுதியில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பின் கை ஓங்கியதில், மு.அன்பழகன் மாநகர மேயரானார். இந்தச் சூழலில் மேயர் பதவி கைவிட்டு போன நிலையில், உட்கட்சி தேர்தலில் திருச்சி மாநகரச் செயலாளர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் தீவிரம் காட்டினர். அதேபோல, தற்போது மத்திய மாவட்டத்திடம் உள்ள மாநகரச் செயலாளர் பதவியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்பதில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களும் முழுமுனைப்பில் ஈடுபட்டனர்.
இந்தசூழலை கருத்தில் கொண்ட திமுகவின் தலைமை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருச்சி மாநகர செயலாளர் பதவியை 2-ஆக உடைத்து திருச்சி மத்திய மாநகரம், திருச்சி தெற்கு மாநகரம் என மாநகர செயலாளர் பதவியை உடைத்து அமைச்சர் நேருவையும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் கூல் செய்தது.
அதன்படி, திருச்சி மாநகரம் என்றிருந்த திமுகவில் திருச்சி மத்திய மாவட்ட மாநகர செயலாளர் பதவியும், திருச்சி தெற்கு மாவட்ட மாநகர செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டு அந்தப் பதவிகளுக்கு வரும் நாட்களில் நிர்வாகிகள் நியமிக்கப்படவிருக்கின்றனர்.
எப்படியோ, திமுக மாநகர செயலாளராகவும், மாநகராட்சி மேயராகவும் பதவி வகிக்கும் மு.அன்பழகன் ஆரம்பம் முதலே அமைச்சர் நேருவின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டதால் தமது பதவியை தக்க வைத்துக்கொள்கின்றார்.
அதேபோல், திருச்சி என்றாலே அமைச்சர் கே.என்.நேரு தான் என்ற நிலையை தகர்த்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வருகைக்கு பிறகு அவருக்கு விசுவாசியாக மாறிய அப்போதைய மலைக்கோட்டை பகுதி செயலாளரும், தற்போது 3-வது மண்டல தலைவருமான மதிவாணன் திருச்சி தெற்கு மாவட்ட மாநகர செயலாளராக அறிவிக்கப்படவிருக்கின்றார்.
ஏற்கனவே மேயர் ரேஸில் கே.என்.நேரு கை ஓங்கிய நிலையில் தற்போது மாநகர செயலாளர் ரேஸில் இருதரப்பையும் கூல் செய்த கட்சி தலைமை அன்பில் மகேஷ் விசுவாசியான மதிவாணனுக்கு கட்சியின் பொறுப்பை வாங்கி தந்து அழகு பார்த்திருக்கின்றது.
இந்தநிலையில், திமுகவின் ஆரம்பகால முதல் விசுவாசியாகவும், கூட்டங்களுக்கும் நடையாய் நடந்து எந்த பதவியும், எந்த பலனையும் அடையாத ஒரு தொண்டர் நம்மிடம் பேசுகையில், கட்சி கொடியை கூட அந்த காலத்தில் வட்ட செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை தாங்களே முன்நின்று கட்சிகொடிகளை கட்டினர். இப்போது வட்ட செயலாளர் முதல் வட்ட அடிப்படை உறுப்பினர்கூட கட்சி கொடி கூட பிடிப்பதில்லை. கட்சி கொடி கட்டக்கூட காண்ட்ராக்ட் பேசுகின்றனர். புதிதாய் பதவி ஏற்றவர்கள் நிலை இதுதான்.
அப்போது உழைப்புக்கும், கட்சி விசுவாசத்திற்க்கும் கொடுக்கப்பட்ட பதவிகள், இப்போது கட்சி அமைச்சர், நிர்வாகிகளுக்காக உழைப்பவர்களுக்கும், கார் கதவை திறந்து அமைச்சர், மாவட்ட நிர்வாகிகள் வீட்டுக்கு சேவையாற்றுபவர்களுக்குமே கட்சியில் பதவி என வந்துவிட்டது வேதனை.
திமுகவின் ஐம்பெரும் கொள்கைகள் அறியாத இன்னும் சொல்லபோனால், கட்சிக்கு வந்து 1 வருடம், 6 மாதமே ஆனவர்களுக்கு வட்ட செயலாளர்கள், மாநகர நிர்வாகிகள் பதவி என்பதும், மாவட்ட நிர்வாகிகள் பெயர் மற்றும் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பெயர்கூட தெரியாத சிலருக்கும், சமீபத்தில் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் உடனே திமுகவில் முக்கிய பதவி என்பது திமுகவுக்கு வந்த சோதனை என தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களை மையமாக வைத்து பேசினார்.
திமுகவில் இப்போது மறைந்த பேராசிரியர் அன்பழகன் இருந்திருந்தால் கட்சியை இப்படி ஆளுக்கேற்றவாறு கூறுபோட்டிருக்கமாட்டார்கள். மாநகரமும் 2-ஆக உடைந்திருக்காது என மறைமுகமாக துரைமுருகனை கட்டம் கட்டிய அடிப்படை தொண்டனின் ஆதங்கத்தையும், விமர்சனத்தையும் நம்மால் கேட்க முடிந்தது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.