2021-22 நிதியாண்டில், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) நாட்டிலுள்ள 36 பிராந்தியக் கட்சிகளில் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக ரூ. 318.745 கோடி பெற்றுள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) இந்தியாவில் தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் நீண்ட காலமாக தேர்தல் கண்காணிப்பு மற்றும் வருடாந்திர அரசியல் கட்சி கண்காணிப்புகளை நடத்தி வருகிறது. இந்தச் சங்கம் தற்போது பிராந்தியக் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை தொடர்பான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டெல்லிக்கு கண்டிப்பாக வரணும்; பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு மோடி அழைப்பு
இதன்படி, 2021-22 நிதியாண்டில், நாட்டிலுள்ள 36 பிராந்தியக் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கிய மொத்த நிதியில் (ரூ. 1213.132 கோடி) திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 26.27 சதவீதத்தை (ரூ. 318.745 கோடி) பெற்றுள்ளது. பிஜு ஜனதா தளம் கட்சி ரூ. 307.288 கோடி பெற்று இரண்டாம் இடத்தையும், பாரத் ராஷ்டிர சமிதி (முந்தைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) ரூ. 218.112 கோடியுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட ADR அறிக்கையின்படி, 36 பிராந்தியக் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளில் 85.7274 சதவீதம் தேர்தல் பத்திரங்களில் இருந்து வந்துள்ளது, அதாவது ரூ.1213.132 கோடியில் ரூ.1039.987 கோடியாகும்.
ADR இன் சமீபத்திய அறிக்கை, கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த விவரங்கள் அடிப்படையில், 2021-22 நிதியாண்டில் பிராந்திய அரசியல் கட்சிகள் பெற்ற அனைத்து நன்கொடைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.
நன்கொடைகளின் பெரும் பயனாளியாக, தி.மு.க.,வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.318.745 கோடி கிடைத்தது.
36 கட்சிகளில் 35 கட்சிகளின் மொத்த வருமானம் 2020-21 நிதியாண்டில் ரூ.565.424 கோடியிலிருந்து 2021-22 நிதியாண்டில் ரூ.1212.708 கோடியாக உயர்ந்துள்ளது, அதாவது மொத்தமாக 114.48 சதவீதம் அதிகரித்துள்ளது.
அறிக்கையின்படி, 2021-22 நிதியாண்டில் 21 பிராந்தியக் கட்சிகள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை செலவழிக்கவில்லை என்று அறிவித்துள்ளன, அதே நேரத்தில் 15 அரசியல் கட்சிகள் அந்த ஆண்டில் சேகரிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக செலவு செய்தன.
தி.மு.க தனது மொத்த வருமானத்தில் ரூ.283.344 கோடிக்கு மேல் செலவழிக்காமல் உள்ளது, பிஜூ ஜனதா தளம் மற்றும் பி.ஆர்.எஸ் முறையே ரூ.278.658 கோடி மற்றும் ரூ.190.173 கோடிகளை செலவழிக்காமல் உள்ளன. PMK, INLD, JKPDP, AIUDF, NPF, SDF, PDA, DMDK மற்றும் JCC (J) ஆகிய 15 பிராந்திய கட்சிகள் தங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவழித்துள்ளதாக அறிவித்துள்ளன.
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது வருமானத்தை விட அதிகபட்சமாக 3.3052 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தன்னார்வ பங்களிப்புகளின் கீழ், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்கள் வருமானத்தில் ரூ. 852.88 கோடியை வசூலித்துள்ளன, மற்ற நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் 2021-22 நிதியாண்டில் ரூ.187.107 கோடியாக இருந்தது. பகுப்பாய்வு செய்யப்பட்ட 36 பிராந்தியக் கட்சிகளில் 10 கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக ரூ. 852.88 கோடி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன மற்றும் மொத்த வருமானத்தில் ரூ. 93.468 கோடி 2021-22 நிதியாண்டில் 36 பிராந்தியக் கட்சிகளால் வட்டி வருமானம் மூலம் ஈட்டப்பட்டது, என அறிக்கை கூறுகிறது.
2021-22 நிதியாண்டில் 36 பிராந்தியக் கட்சிகளின் மொத்த அறிவிக்கப்பட்ட செலவு ரூ. 288.146 கோடி மற்றும் சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தளம், அதிமுக போன்ற முன்னணி 5 கட்சிகள் செய்த மொத்த செலவு ரூ.176.779 கோடி ஆகும். சமாஜ்வாதி கட்சி 54.017 கோடியும், தி.மு.க 35.401 கோடியும், ஆம் ஆத்மி 30.295 கோடியும், பிஜூ ஜனதா தளம் 28.63 கோடியும், அ.தி.மு.க 28.436 கோடியும் செலவு செய்துள்ளன, என அறிக்கை கூறுகிறது.
2021-22 நிதியாண்டுக்கான பிராந்தியக் கட்சிகளின் மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான செலவுகள் தேர்தல் செலவுகள், பொதுப் பிரச்சாரம் மற்றும் நிர்வாகச் செலவுகள் என்று அறிக்கை கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.