Kanimozhi Election Campaign : மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு வேல் பரிசளிக்கப்பட்டபோது அதை அவர் வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை நடத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால், தனி இலாகா அமைத்து 100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருத்தணி அருகே ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலினுக்கு திமுகவை சேர்ந்த முருக பக்தர்கள், திருத்தணி முருகனின் வேல் அன்பளிப்பாக கொடுத்தனர். இதனை பெருந்தன்மையுடன் பெற்றுக்கொண்ட ஸ்டாலின் முருக பக்தர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஆனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எப்போதும் இந்து கடவுளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்ட நிகழ்வு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகியது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சார பயணமாக மதுரை சென்ற திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா தொழிலாளர்களை சந்தித்து பேசிய அவர், பதவியை காப்பற்றிக்கொள்ள மத்திய அரசு எதை கூறினாலும், தமிழக அரசு தலையாட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், மதுரை சிம்மக்கல் பகுதியில் நடைபெற்று வரும் கருணாநிதி சிலை அமைக்கும் பணி யை பார்வையிட சென்ற, கனிமொழிக்கு, வடக்குமாசி வீதி தி.மு.க., வட்ட செயலாளர் பாலு, பகுதி செயலாளர் சரவணன் ஆகியோர் வெண்கலத்தால் ஆன வேல் கொடுக்க முயன்றனர். அவர்களின் இந்த செயலால் கோபமான கனிமொழி முகத்தை சுளித்துக்கொண்டு வேல் வாங்க மறுத்துள்ளார்.
இது குறித்து தி.மு.க., வட்ட செயலாளர் பாலு கூறுகையில், “திருப்புவனம் அருகே எங்கள் ஊரில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்ல வேல் செய்தோம். அதை எடுத்துச்செல்லும் ஆட்டோவில், செல்லும் வழியில், கனிமொழியை பார்க்க சென்றதால், கையில் வேலை எடுத்து சென்றோம். ஆனால் அந்த வேலை அவருக்குதான் கொடுக்க வந்ததாக நினைத்துவிட்டார். நாங்கள் அவருக்கு வேல் கொடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட வேல் யாத்திரைக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் கையில் வேல் கொடுக்கப்பட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது கனிமொழி வேல் வாங்க மறுத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாங்கள் அவருக்கு வேல் கொடுக்க வில்லை என்று திமுகவினர் கூறியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"