டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம்; ராஜ்ய சபா எம்.பி.க்கு தோல்வி அடைந்தவர்கள் கடும் போட்டி

டெல்டா மாவட்டங்களில் இருந்து அமைச்சரவையில் பிரநிதித்துவம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில்தான் டெல்டா பகுதியைச் சேர்ந்த ஏ.கே.எஸ். விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

aks vijayan, special representative of tn govt of delhi, dmk, dmk ex mp aks vijayan, ஏகேஎஸ் விஜயன், டெல்லி சிறப்பு பிரதிநிதி, திமுக, டெல்டா பகுதி, mk stalin, delhi, cm mk stalin

தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவும் பலமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த முகமது ஜான் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி காலியானது. அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாக இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளகள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆனதால் அவர்கள் தங்கள் ராஜ்ய சபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இதனால், தமிழ்நாடு சார்பில் 3 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியானது. ஆனால், இந்த 3 ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால் அதிக எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட திமுகவுக்கே அந்தப் பதவிகள் கிடைக்கும். அதே போல, தமிழ்நாட்டில் ஆட்சி மாறியதால் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியும் காலியானது.

அதனால், திமுகவில் 3 ராஜ்ய சபா எம்.பி.க்கள் மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளன. ராஜ்ய சபா எம்.பி.க்கள் பதவிக்கு முதலில் தென் மாவட்டங்களில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செலவன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்ட கார்த்திகேய சிவசேனாபதி, சுரேஷ்ராஜன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. அதே போல, தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கு பாலமாக செயல்படுகிற டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசனுக்கு வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சருக்கு நிகரான இந்த பதவியில் இருப்பவர் மத்திய கேபினெட் அமைச்சரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலத்தின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அந்த அளவுக்கு அதிகாரம் உள்ள பதவி ஆகும்.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில், ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு தென் மாவட்டங்களில் தேர்தலில் தோல்வியடைந்த திமுக தலைவர்கள் கடும் போட்டி போட்டு வருவதாகத் தெரிகிறது. எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பதவி எதுவும் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்பதால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வன், கார்த்திகேய சிவசேனாபதி, நாகர்கோவில் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி ஆஸ்டின் போன்றவர்கள் தங்கள் பகுதியில் அதிமுகவினரை எதிர்த்து அரசியல் செய்வதற்கு ராஜ்ய சபா எம்.பி பதவியை எதிர்பார்ப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மு.க.ஸ்டாலின் இதில் ஆர்வம் காட்டவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், தேர்தலில் அவர்களுக்கு ஏற்கெனவே வாய்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது. அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனால், அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு அளிப்பாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்ட ஏ.கே.எஸ். விஜயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டெல்டா மாவட்டங்களில் இருந்து அமைச்சரவையில் பிரநிதித்துவம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில்தான் டெல்டா பகுதியைச் சேர்ந்த கோவி.செழியன் திமுக சட்டப்பேரவைக் கொறடாவாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஏ.கே.எஸ். விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk ex mp aks vijayan appointed as special representative of the govt of tamil nadu in delhi

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com