ச.செல்வராஜ்
திமுக செயற்குழுவுக்கு முதல் முறையாக மாவட்ட அளவிலான அணிகளின் அமைப்பாளர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன தீர்மானம் செயற்குழுவில்?
அரை நூற்றாண்டு காலம் திமுக.வின் தலைவராக கோலோச்சிய கருணாநிதி இல்லாத நிலையில், திமுக தனது அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கிறது. கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கட்சி ரீதியான முதல் நிகழ்வு, ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற இருக்கும் செயற்குழுக் கூட்டம்தான்!
மாவட்டத்திற்கு தலா ஒரு செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என சுமார் 200 பேர் திமுக.வின் செயற்குழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றவர்கள்! இவர்கள் தவிர எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் என சுமார் 150 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவார்கள்!
ஆனால் ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற இருக்கும் செயற்குழு சற்றே விரிவடைய இருக்கிறது. இந்த செயற்குழுவுக்கு முதல் முறையாக மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் அமைப்பாளர்களையும் அழைத்திருக்கிறார்கள்.
திமுக.வில் இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவர் அணி, வர்த்தகர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை என பிரிவுகள் இருக்கின்றன.
மாவட்டம் வாரியாக இந்த அணிகளுக்கு அமைப்பாளர்கள் உள்ளனர். முதல் முறையாக மேற்படி அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்களுக்கும் செயற்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தலைமைக் கழகத்தில் இருந்து கடிதம் அனுப்ப அவகாசம் இல்லாததால், அந்தந்த மாவட்டச் செயலாளர் மூலமாக இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்படுகிறார்கள். அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர் அந்தஸ்தை பெற்றவர்கள்தான். தற்போது செயற்குழுவுக்கும் அழைப்பு கிடைத்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
அதேசமயம் மாவட்டக் கழகத்தின் இணை, துணை செயலாளர்களுக்கு அழைப்பு இல்லை. இதனால், ‘அணிகளின் அமைப்பாளர்களைவிட மாவட்ட அவைத்தலைவர், பொருளாளர், இணை-துணை செயலாளர் பதவிகள் மட்டமாகப் போய்விட்டதா?’ என இவர்கள் தரப்பில் குமுறல் இருக்கிறது.
திமுக செயற்குழுவில் என்ன தீர்மானம்?
ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிற திமுக செயற்குழுவில் ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்ய இருப்பதாகவும், அடுத்த பொதுக்குழுவில் அதற்கு அங்கீகாரம் பெற இருப்பதாகவும் முதலில் தகவல்கள் பரவின. இது குறித்து தலைமைக்கழக நிர்வாகி ஒருவரிடம் தமிழ். இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக பேசியபோது, ‘செயற்குழுவில் கட்சித் தலைவரை முடிவு செய்யும் நடைமுறையே திமுக.வில் கிடையாது. தலைவரை தேர்வு செய்ய வேண்டியது, முழுக்க பொதுக்குழுவின் வேலைதான்!
தவிர, தற்போது செயல் தலைவர் பொறுப்பில் இருப்பதால் உடனடியாக தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. செயற்குழுவில் தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம், கலைஞரின் கனவுகளை மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றும்வோம் என்பதாக தீர்மானம், கலைஞருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் பிரமாண்டமாக நடத்துவது ஆகியவை குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
இதன்பிறகு செப்டம்பரில் பொதுக்குழுவைக் கூட்டி, மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்வு செய்வோம்’ என்றார் அவர்! அறிவாலயத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாலையும், இன்று (11-ம் தேதி) காலையும் துரைமுருகன், கனிமொழி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்ட சீனியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.