கருணாநிதி மரணத்திற்கு பிறகு முதல் செயற்குழுக் கூட்டத்தை ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக கூட்டுகிறது. ஆனால் அந்த முதல் கூட்டத்திற்கே யார், யாரை அழைப்பது என ஏக திணறல்!
திமுக செயற்குழு என்றால், மாவட்டத்திற்கு ஒரு தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் அதில் இடம் பெறுவார்கள். கூடுதலாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க வைப்பார்கள்.
ஆனால் ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக நடத்தும் செயற்குழுக் கூட்டத்திற்கு கூடுதலாக திமுக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டது. திமுக.வில் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, தொழிலாளர் அணி என மொத்தம் 18 சார்பு அணிகள் இருக்கின்றன.
திமுக.வில் அமைப்பு ரீதியாக 65 மாவட்டங்கள் இருப்பதால், மேற்படி அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் 65 பேர் கூடுதலாக செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க இருக்கிறார்கள். இவர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு அனுப்ப அவகாசம் இல்லை. எனவே அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாக இரு தினங்களுக்கு முன்பே அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுவிட்டது.
முதல் முறையாக இப்படி மாவட்ட அணிகளின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது ஏன்? என்பது குறித்து எந்தத் தகவலும் திமுக தரப்பில் அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை. எனினும் இந்த செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவை, கட்சியின் அனைத்து அணிகளின் நிர்வாகிகளுக்கும் முழுமையாக கொண்டு சேர்க்கும் திட்டத்துடன் அவர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி, விழுப்புரம், தஞ்சை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் கருணாநிதிக்கு பிரமாண்டமான இரங்கல் கூட்டங்களை நடத்த திமுக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரபூர்வ முடிவு, செயற்குழுவில் எடுக்கப்படும். அந்தக் கூட்டங்களுக்கு தொண்டர்களை அதிக அளவில் பங்கேற்க வைக்கும் பொறுப்பு செயற்குழுவுக்கு வரும் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால் இப்படி சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்களை அழைப்பதில் புதிய சிக்கல் எழுந்தது. சார்பு அணி நிர்வாகிகளைப் பொறுத்தவரை, அவர்கள் நியமன நிர்வாகிகள்தான்! ஆனால் மாவட்ட இணை-துணைச் செயலாளர்கள், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் உள்கட்சித் தேர்தலை எதிர்கொண்டு வென்றவர்கள்!
‘சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்களைவிட நாங்கள் மட்டமா?’ என எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகள் குமுற ஆரம்பித்தனர். இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 11) பதிவான தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டோம்.
இந்தச் சூழலில் மாவட்ட நிர்வாகிகளையும் அழைக்க அவசர உத்தரவை மாவட்டச் செயலாளர்களுக்கு பிறப்பித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இணை-துணை செயலாளர்கள், பொருளாளர், அவைத்தலைவர் என கூடுதலாக 5 பேர் செயற்குழுவுக்கு வருவார்கள். ஆக செயற்குழுவுக்கு வருகிற மொத்தக் கூட்டம் 600-க்கும் அதிகமாக இருக்கும்.
இதன் பிறகும் கட்சிக்குள் குமுறல் ஓய்வதாக இல்லை. ‘மாவட்ட இணை-துணை நிர்வாகிகளைப் போல நாங்களும் கட்சித் தேர்தலில் ஜெயித்தவர்கள்தான். இன்னும் சொல்லப் போனால் இணை-துணை நிர்வாகிகளைவிட தொண்டர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து கட்சிப் பணியாற்றுவது நாங்கள்தான். எங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்?’ என ஒன்றியச் செயலாளர்களும், நகர செயலாளர்களும் குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
திமுக.விலேயே இன்னொரு தரப்பினர், ‘வழக்கம்போல செயற்குழு உறுப்பினர்களை மட்டும் வைத்து இந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கலாம். அல்லது ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களையும் அழைத்து பொதுக்குழுவாகவே கூட்டியிருக்கலாம். கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் செயற்குழுவில் இவ்வளவு தடுமாற்றத்தை காட்டியிருக்கத் தேவையில்லை’ என்றார்கள்.
14-ம் தேதிக்கு முன்னதாக தங்களுக்கும் அழைப்பு வந்து சேரும் என்கிற நம்பிக்கையில் ஒன்றிய, நகர செயலாளர்கள் இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.