நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள வழக்கில், ஒட்டன்சத்திரம் தாராபுரம் அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், "திருநெல்வேலி செங்கோட்டை-கொல்லம் நான்கு வழிச்சாலையை" விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
'பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் சேகர்ரெட்டி நாகராஜன், பி. சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3120 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மகனின் மாமனார் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதன் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலமும் சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின் படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.
ஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே
வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.