DMK FILES 2 வை கோவையில் வெளியிடுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது. வருகின்ற காலத்தில் செங்கோல் இல்லாமல் ஆட்சி இல்லை என்ற அளவிற்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார். இதனை கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதீனமே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எம்.பி.க்களும் இதில் பங்கேற்க வேண்டும். இந்த பாராளுமன்ற கட்டிடம், புதிதாக வரக்கூடிய எம்.பி.களுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது. இது போன்ற ஒன்று நூறு வருடங்கள் கழித்தாலும் கிடைக்காது. எம்.பி.க்கள் இதில் பங்கேற்கவில்லை என்றால் இது ஒரு சரித்திர பிழையாக மாறிவிடும்.
தமிழகத்தில் வருமானவரித்துறை சோதனை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். அவர்கள் தவறு செய்து இருக்கிறார்கள், அதனால் சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது கரூர் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என அவரை கூறியுள்ளார், அதுமட்டுமின்றி அவரது சகோதரர் அசோக்கின் பெயரையும் கூறிவிட்டு வந்துள்ளார்.
தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தவுடன் அவர் ஒரு புண்ணியவான் என்று ஆர் எஸ் பாரதி கூறுகிறார். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பீகாரில் எல்லாம் சோதனை நடைபெறும் பொழுது யாருக்கும் ஒரு கீறல் கூட விடவில்லை ஆனால் தற்பொழுது கரூரில் சோதனைக்கு சென்று அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்க வேண்டும். அதேபோல் நடைபெறுகின்ற சோதனைகளுக்கு என் மீது பழி போடுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.
DMK files எவ்வளவு நீட்டாக உள்ளது என்பதை நீங்கள் பாருங்கள். அந்த இரண்டாம் பாகம் முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது தான் அதில் இருக்கும். என் மண் என் மக்கள் என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்தில் ஊழலை பற்றி மட்டும்தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் பொழுதும் அங்குள்ள திமுகவின் ஊழலை பற்றி தான் பேசப் போகிறோம். DMK FILES 2ல் திமுகவை சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள்.
DMK FILES 2 வை கோவையில் வெளியிடுவோம். என்னை எந்த அரசியலில் கட்சி இருக்கக் கூறுகிறதோ ஒரு ரூபாய் பணம் கூட அளிக்காமல் தேர்தலில் நிற்பேன்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக் காட்டுவது போல் ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது என்றார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil