திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மதுரை பகுதியில் விவசாயிகள் ஒரு மாத காலமாக பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு காரணம் மத்திய அரசு கிடையாது. தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றது.
10 மாத காலம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கிராம மக்கள் போராட்டம் அறிவித்த பிறகு தமிழக அரசு அப்படியே தனது பேச்சை மாற்றி இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது போல் செயல்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம். டிச.12ம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகனும், நானும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளோம். நல்ல முடிவோடு தமிழகம் வருவோம். விவசாயிகளுக்கு சாதகமான தகவலுடன் வருவோம்.
டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தி.மு.க பைல்ஸ் 1 மற்றும் 2 வெளியிட்டுள்ளோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிற நேரத்தில் தி.மு.க பைல்ஸ் 3 வெளியிடப்படும். அதில் தி.மு.க மட்டுமல்லாது அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள் அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்தும் அம்பலப்படுத்தப்படும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“