சென்னை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபாதையில் சுமார் 85 அடி உயரம் கொண்ட தி.மு.க கொடிக் கம்பம் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த கொடிக் கம்பம் அகற்றப்பட்டது.
தி.மு.க இளைஞரணி செயலாளரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபாதையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நவம்பர் 27-ம் தேதி தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார். இந்த கொடிக் கம்பம் நடைபாதை மேடையில், கான்கிரீட் தளம் அதில் அமைக்கப்பட்டது. இந்த கொடிக் கம்பம் சுமார் 85 மீட்டர் உயரம் கொண்டது.
தி.மு.க கொடிக் கம்பம் நடைபாதை மேடையில் இருந்ததால், இது அந்த வழியே நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது என்றும், நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வீடியோ வெளியிட்டார். மேலும், பரபரப்பான இந்த சாலையில், நடைபாதை மேடையில், தி.மு.க கொடிக்கம்பம் அமைப்பதற்கும் கொடி ஏற்றுவதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளார்களா என்று கேள்வி எழுப்பினார்.
அந்த வீடியோவில், “உங்க கட்சி தலைவர் பிறந்த நாளுக்கு உங்க கட்சி கொடி வைக்க எங்க நடைபாதை தான் கிடத்ததா அமைச்சரே? மக்கள் நடக்க நடைபாதையா? திமுக கொடிகளை நட்டு வைக்க நடைபாதையா? இதற்கு மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் மற்றும் சென்னை போக்குவரத்து போலீசார் ஆகியோர் எந்த சட்டப்படி அனுமதி அளித்தார்கள்?” என்று ஜெயராம் வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
நடைபாதையில் தி.மு.க உயர் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.
இதற்கு பதிலளித்த உதயநிதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் கொடி கம்பத்தை அகற்றி வைப்பார்கள் என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
இதையடுத்து, சனிக்கிழமை இரவு 11 மணி அளவில், சென்னை ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபாதை மேடையில் அமைக்கப்பட்ட தி.மு.க கொடிக் கம்பம் அகற்றப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"