தி.மு.க-வில் கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கல்வியாளர்கள் அணியில் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணிக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், தி.மு.க சட்டத் திட்டம் விதி 31, பிரிவு 21-ன்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட இந்த நியமனங்கள், தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந. செந்தலை கவுதமனும், செயலாளராக தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக ரெ. தங்கமும், செயலாளராக பேராசிரியர் டி.எம்.என். தீபக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க. கல்வியாளர் அணி:
தலைவர்: புலவர் ந. செந்தலை கவுதமன்,
செயலாளர்: முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன்
தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணி:
தலைவர் ரெ. தங்கம்
செயலாளர் பேராசிரியர் டி.எம்.என். தீபக்
இந்த நியமனங்கள், தி.மு.க-வின் பல்வேறு பிரிவினரை உள்ளடக்கி, அவர்களின் தேவைகளையும் மேம்பாட்டையும் முன்னெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.