திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கடுமையாக விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தின் திமுக முகமாக இருந்து வருகிறார். திமுகவில் திருவண்ணாமலை மாவட்டம் தெற்கு வடக்கு என்று பிரிக்கப்பட்டபோது எ.வ.வேலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்து வருகிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக சாவல்பூண்டி சுந்தரேசன் இருந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட இவர் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்குவதுண்டு.
சில மாதங்களுக்கு முன்பு சாவல்பூண்டி சுந்தரேசனுக்கு ஏற்கெனவே மனைவி, மகன், பேரப்பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அபித என்ற இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போது, அவர் கலைஞரை உதாரணம் காட்டியது கட்சியில் கடும் விமர்சனத்தை ஈர்த்தது.
திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் எ.வ.வேலுவும் அவரது மகன் கம்பனும் உள்ளார்கள். மாவட்டத்தில் எ.வ.வேலுவுக்கு அடுத்து அவருடைய மகனுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கட்சியில் சில மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தி இருந்துவருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், திமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், எ.வ.வேலுவையும் அவரது மகன் கம்பனையும் திமுகவில் நிலவும் வாரிசு அரசியலையும் கடுமையாக விமர்சித்து மற்றொரு திமுக நிர்வாகியிடம் போனில் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சாவல்பூண்டி சுந்தரேசன் போனில் பேசியதாவது: “நான் பேசுகிறேன். அடுத்து என் பெயரை சொல்கிறார். மந்திரி. எனக்கு கைதட்ட மாட்டேன் என்கிறார்கள் ஜால்ராக்கள். இன்னும் கட்சிக்கு வந்து ஒன்றும் செய்யவில்லை. அப்பன் பாதுகாபில், அப்பன் குடை நிழலில் இருக்கிற எ.வ.வேலு மகன் கம்பன் பெயர் சொன்னால் எல்லாம் கை தட்டுகிறார்கள்; குதிக்கிறார்கள்; அப்ப அரசியலில் நான் என்ன பண்ணுவேன். அப்ப நாங்க உழைச்ச உழைப்பெல்லாம் வீண் தானே. அவங்க அப்பா வந்து 8 காலேஜ் வைத்துக்கொண்டிருக்கிறார். பள்ளிக்கூடம், ஐடிஐ, கலேஜ் என 8 வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அவர்களுக்கு 6,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஸ்பின்னிங் மில் இருக்கிறது. கிரானைட் கம்பனி இருக்கிறது. மெடிக்கல் காலே கட்டுகிறார். கரூரில் 500 கோடி ரூபாய் பைனான்ஸ் விடுகிறார். சினிமா படத்துக்கு பைனான்ஸ் பண்றார். சினிமா படம் டிஸ்ட்ரிப்யூட் பண்றார். டிவி தொடர் எடுக்கிறார். இந்த கட்சியில கலைஞரைப் பார்க்காத சாத்தனூரில் கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, எ.வ.வேலு வாழ்கனு ஒருத்தன் 20 வருஷமா 30 வருஷமா கஷ்டப்பட்டுங்கிறான் ஒருத்தன். கரமந்தல்ல கஷ்டப்படுறான். சாவல்பூண்டியில கஷ்டப்படுறான். கொடி எடுத்துக்கொண்டு ஓடுறான். ரத்தத்தை சிந்துறான். வியர்வை சிந்துறான். மந்திரி எதிர்ல கத்துறான். ஜெயிலுக்கு போறான். அவன்லாம் அப்படியே செத்துப்போறான். ஆனால், அப்பனும் வாழ்க்கையை அனுபவிக்கனும். புள்ளையும் வாழ்க்கையை அனுபவிக்கனும். இவ்வளவு தொழில் இருக்கிறது. அதில் எதிலாவது போய் வளருங்கள் என்றால், இவன் பிழைப்பை வந்து கெடுக்கிறானே. அப்பன் மகன் அது கலைஞராக இருந்தாலும் கலைஞர் பிள்ளையாக இருந்தாலும் அவங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.
எவ்வளவோ தொண்டர்கள் ரத்தத்தைக் கொடுத்துவிட்டு, வியர்வைக் சிந்திவிட்டு, ஜெயிலுக்கு போய்விட்டு கஷ்டப்பட்டுவிட்டு ஒரு பொறுப்பும் இல்லாமல் இருக்கிறார்கள். உங்க அப்பா வருகிறார். மந்திரி பதவி வாங்கிக்கிறார். மாவட்ட செயலாளர் ஆகிறார். எம்.எல்.ஏ-வாகிறார். எல்லா தொகுதியையும் அனுபவிக்கிறார். அப்ப நாங்கள் எல்லாம் இந்த கட்சியில் உழைத்து என்ன பயன் வீண். இது கட்சியா இல்லை அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டோமா?
வேலு மகனை `கலியுக கம்பன், கலசப்பாக்கத்தைக் காப்பாற்ற வந்த கடவுள்’னு ஜால்ரா பசங்க சொல்றானுங்க. என்ன கொடுமை பாரு இந்த நாட்டுல. கட்சி எவ்வளவு கேவலமாப் போய்க்கிட்டிருக்கு...” என்று கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
சாவல்பூண்டி சுந்தரேசனின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுவும் தேர்தல் நெருங்கிவருகிற நேரத்தில் இத்தகைய பேச்சு திமுக மீது தவறான அபிப்ராயத்தை உருவாக்கும் என்று திமுகவினர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, எ.வ.வேலு இது குறித்து திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதோடு, சாவல்பூண்டி சுந்தரேசன் தன் மீது வைத்த விமர்சனத்துக்கு மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 6ம் தேதி எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “சில இணையதளங்களில், தொலைக்காட்சிகளில் ஒரு ஆடியோ ஒளிப்பரப்பாகிறது. அது முற்றிலும் பொய்யான தகவல்களைக் கொண்டது. நான் தி.மு.க.வுக்கு வருவதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறேன். பின் தங்கிய மாவட்டமான இங்கு மக்கள் கல்வி வளர்ச்சிப் பெற வேண்டும் என்பதற்காக அறக்கட்டளை மூலம் அந்த கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு ஏழைகள் கல்வி நிலை உயர பாடுபடுகிறது. இந்தியன் வங்கியில் 130 கோடி ரூபாய் கடன் வாங்கி மருத்துவமனைக் கட்டப்பட்டு வருகிறது.
எனக்கு ஸ்பின்னிங் மில் இருக்கிறது, பைனான்ஸ் வைத்திருக்கிறேன் என்று சொல்வது பொய். தமிழகத்தில் 6,000 ஏக்கர் நிலம் இருக்கிறது எனச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது என் மீது வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக 11 லட்ச ரூபாய் கணக்கு காட்டவில்லை, இந்த நிதி எப்படி வந்தது என வழக்குப் பதிய வைத்தார். அது சென்னையில் உள்ள என் வீட்டில் என் உதவியாளர், கார் ஓட்டுநர் தங்குவதற்காக அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம், அதனை கணக்கு காட்டியுள்ளேன் என கீழ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன். அது மேல்முறையீடாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று அங்கும் விடுவிக்கப்பட்டேன். எனக்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி அரசியல் வாழ்வு முற்றுப்பெற்றவர்கள். நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது பொது விநியோக திட்டம் தமிழகத்தில் செயல்படும் முறையை உச்சநீதிமன்ற நீதிபதிகளே பாராட்டினார்கள்.
பொதுவாழ்க்கையில் நேர்மையாக, மக்கள் தொண்டாற்றும் வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அருணை தமிழ் சங்கம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்காலம் சொன்னது போல் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என தூய்மை அருணை திட்டம், மாணவர்களுக்கு தளபதி (ஸ்டாலின்) பெயரில் இலவச கணினி மையம், இலவச தையல் பயிற்சி மையம் நடத்திக் கொண்டு வருகிறேன். தீப திருவிழாவிற்கு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு அறக்கட்டளை மூலம் மூன்று வேளை உணவு, தங்குமிடம் வழங்கி வருகிறோம். பொது வாழ்க்கையில் தூய்மையாக இருக்கிறேன்” என்று கூறினார்.
எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில், சாவல்பூண்டி சுந்தரேசன் திமுகவில் வாரிசு அரசியல் பற்றி பேசியது குறித்து எதுவும் பதிலளித்து பேசவில்லை.
இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் சாவல்பூண்டி சுந்தரேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து திமுக நாளிதழான முரசொலியில் வெளியான அறிவிப்பில், “திருவண்ணாமலை தெற்கு உமாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருணநதும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சாவல்பூண்டி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து திமுக வட்டாரத்தில் பேசியபோது, “அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி கட்சி தலைமை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு பதிலளித்து மன்னிப்புக் கடிதம் அளித்தால் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்” என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.