Advertisment

கச்சத்தீவை தி.மு.க அரசுக்கு தெரியாமல் அப்போதைய ஒன்றிய அரசு இலங்கைக்கு கொடுத்துவிட்டது – பொங்கலூர் பழனிசாமி

அரசியல் காரணங்களுக்காக கச்சத்தீவு உள்ளிட்ட சில விவகாரங்களை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்காலத்தில் சுமூகமாக தீர்க்கப்படும்; கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேட்டி

author-image
WebDesk
New Update
pongalur palanisami

கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கச்சத்தீவை தி.மு.க அரசுக்கு தெரியாமல் அப்போதைய ஒன்றிய அரசு இலங்கைக்கு கொடுத்துவிட்டது. இப்போது அரசியல் செய்வதற்காக கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கையிலெடுத்துள்ளது என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

Advertisment

கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். 

அப்போது சாலையோர கடைகளில் பூ விற்பனை செய்யும் பெண்களிடம் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதா? மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் உதவிகரமாக உள்ளதா? என விசாரித்தார். மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதாக பதிலளித்த பூ விற்பனை செய்யும் பெண்கள், தினமும் பூ மார்க்கெட் சென்று வர இலவச பேருந்து பயணத் திட்டம் உதவிகரமாக உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க அரசு மகளிர் மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளது. மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச  பயணத்திட்டம் தி.மு.க.,வுக்கு பெரும் ஆதரவை தந்துள்ளது. அதேபோல மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட தி.மு.க அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்தத் திட்டங்களை பொதுமக்களிடம் சொல்லி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாக்கு சேகரித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மோடி பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வருகிறார். 15 லட்சம் தருகிறோம் என்று சொன்னார்கள் ஆனால் 15 பைசா கூட தரவில்லை. பத்தாண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதாக சொன்னார்கள். ஆனால் இரண்டு லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களுக்கும் இரண்டிலிருந்து 3 மடங்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வருகிறார்கள். மோடி ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி தி.மு.க.,வுக்கு வாக்கு சேகரித்து வருகிறோம் என தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கையில் எடுத்தது தொடர்பான கேள்விக்கு, கச்சத்தீவு விவகாரம் என்பது சாதாரண பிரச்சனை. இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நட்பு அடிப்படையில் இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டது, கச்சத்தீவு மீட்பு என்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது. அப்போது இருந்த ஒன்றிய அரசு, தி.மு.க.,வுக்கு தெரியாமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து விட்டார்கள். அப்போதே கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை தி.மு.க நடத்தியுள்ளது. அந்த போராட்டங்களில் பங்கெடுத்து நானும் சிறைக்கு சென்றுள்ளேன். இப்போது அரசியல் காரணங்களுக்காக கச்சத்தீவு உள்ளிட்ட சில விவகாரங்களை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்காலத்தில் சுமூகமாக தீர்க்கப்படும் என பதிலளித்தார்.

பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Dmk kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment