தமிழக அரசியல் வரலாற்றில் நீங்க இடம்பெற்றுள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனாக மு.க அழகிரி, விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி. தென் தமிழக அரசியலில், திமுக தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய இவர், 2008ல் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற காரணமாக இருந்ததால், அக்கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து கடந்த 2009-ம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், மதுரை தொகுதியில் ஒரு லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த அவர் 2014-ம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு சில மாதங்களில் அழகிரி மீண்டும் கட்சிக்குள் இணைந்துவிடுவார் என எதிபார்க்கப்பட்ட நிலையில், அவர் நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னைக்கு வராமல் மதுரையிலேயே தங்கியிருந்த அவர், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார். தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து கலைஞர் கருணாநிதியை சந்தித்த அவர் தான் மீண்டும் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள் என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.
ஆனால் அதற்குள் கருணாநிதி இறந்துவிட்ட நிலையில், அழகிரி கட்சியில் இணைய வாய்ப்பும் மங்கிப்போனதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் இது குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அழகிரி வேறு கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் பாஜகவுடன் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த அழகிரி நான் கலைஞரின் மகன் திமுக – வை தவிர வேறு எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தீவிர அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் அழகிரி, திமுக குறித்தும், அதன் தலைவர் மு.க ஸ்டாலின் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனால் தற்போது அவர் கட்சி தொடங்குவாரா அல்லது வேறு கட்சியில் இணைவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சென்னை வந்ததும் ரஜியை சந்திப்பேன் என கூறியிருந்தார். தொடர்ந்து ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, அழகிரி அந்த கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென ரஜினி கட்சி தொடங்கவில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அழகிரியின் அடுத்த அரசியல் அடி எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தற்போது அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது கட்சிக்கு கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் அல்லது கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என இரண்டு பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி 21 அல்லது 22-ந் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அழகிரி கட்சி தொடங்கினால், திமுக தொண்டர்கள் அந்த கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த வாரம் அரசியல் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், திமுக தலைவர் ஸ்டாலினை குறை சொன்னாலும், திமுக கட்சித் தொண்டர்களை கவரும் வகையிலேயே அவரது பேச்சு இருந்தது. இதனால் அழகிரி கட்சி அறிவிப்பு வெளியாகும்போது திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"