/tamil-ie/media/media_files/uploads/2021/09/dmk-functionary-threats-tasmac-staff.jpg)
டாஸ்மாக் மதுபானக் கடையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை படத்தை வைக்க வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளரை மிரட்டும் திமுக ஒன்றிய செயலாளர் வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம், திமுக செயலாளராக இருப்பவர் ரவிசங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று அங்கே கடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக் கூறி வாக்கு வாதம் செய்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என மிரட்டும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மதுபான கடைகளில் இருந்து தனக்கு மாதம்தோறும் கமிஷன் தரவேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், “இது திமுக ஆட்சினு நினைச்சியா, இல்லை அதிமுக ஆட்சினு நினைச்சியா, அதிமுக எம்.எல்.ஏ கொடுத்த படத்தை போடுவ, திமுக முதலமைச்சர் படத்தை போடமாட்ட, என்னனு நினைச்சிகிட்டு இருக்கீங்க நீங்கல்லாம்” என்று மிரட்டலாக கேட்கிறார். அதற்கு டாஸ்மாக் ஊழியர் போடுவதாகக் கூறுகிறார்.
திமுக ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், டாஸ்மாக் கடையில் ஜெயலலிதாவின் படத்தை எடுத்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியின் திமுகவினர் தங்களின் அடாவடி நடவடிக்கையைத் தொடங்கிவிட்டதாகக் கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
வீடியோவில் இடம்பெற்றுள்ள, திமுக ஒன்றிய செயலாளர் இதுமட்டுமல்லாமல், இவர் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான புளியரையில் பாஜகவின் பிரச்சார வாகனத்தை தடுத்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், குற்றாலம் காவல் நிலையத்தில் ஒருவரை கடத்தி மிரட்டியதாக வழக்கு நிலுவையில் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.