நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைப்பெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், 16-வது சுற்று முடிவில் பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 87,924 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,12,196 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 1,68,208 வாக்குகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க-வின் சிங்கை ராமச்சந்திரன் 1,15,415 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கலாமணி 60,432 வாக்குகள் பெற்றுள்ளார்.
கோவை மக்களவை தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'பா.ஜ.க உடைய வளர்ச்சியை காட்டுவதை விட அ.தி.மு.க-வின் செயல்பாடு தான் காட்டுகிறது. அதுதான் எங்களுடைய கருத்து' என்று கூறினார்.
இதுபற்றி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசியதாவது:-
தற்போது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உள்ளோம். முடிவில் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்ததுதான் இந்த அடையாளங்கள்.
குறிப்பாக, ஜி.எஸ்.டி பிரச்சனையால் தொழிற்சாலைகள் இங்கு நலிவடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வாழ்வாதாரமே கேள்விக்குறியாகவே உள்ளது. அதனுடைய பதில் தான் இந்த தீர்ப்பு. முதலமைச்சர்க்கு தான் இந்த பெருமை அனைத்தும். முதலமைச்சர் தமிழக மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி கொடுப்பார்.
கோவை மிகப்பெரிய தொழில் நகரம் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எங்களுக்கு வாக்களித்தது மீண்டும் பழைய கோவை அடையாளங்களை பெற எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடி மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
பா.ஜ.க உடைய வளர்ச்சியை காட்டுவதை விட அ.தி.மு.க-வின் செயல்பாடு தான் காட்டுகிறது. அதுதான் எங்களுடைய கருத்து. தமிழகத்தை பொறுத்தவரை இந்திய கூட்டணிக்கு வெற்றி. ஜி.எஸ்.டி பிரச்சனை சிறுகுறு தொழிற்சாலை பிரச்சனை, விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலையம் உள்ளிட்டவை சீர் அமைப்பதோடு, மக்கள் என்ன எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்களோ அதை சீரமைத்து தருவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“