தமிழகத்தில் 8 மாதங்களில் திமுக ஆட்சி: பொதுக்குழுவில் ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

DMK General body Meeting
திமுக பொதுக்குழு

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் அறிவிக்கப்பட்டனர். அதே நேரத்தில், திமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் ஆ.ராசாவுக்கும், திமுகவின் மூத்த தலைவர் பொன்முடிக்கும் துணை பொதுச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன், மார்ச் மாதம் முதுமையால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலாமானார். அவருடைய மறைவை அடுத்து திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, அந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்காக திமுகவில் பொருளாளர் பதவி வகித்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கடந்த வாரம், திமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, செப்டம்பர் 9ம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அதில் பொதுச்செயலாளர், பொருளாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, திமுகவில் பட்டியல் இனத்தவருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதில்லை என்று கட்சிக்கும் உள்ளேயும் வெளியேயும் விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரத்தில், கட்சியில் மற்றொரு மூத்த தலைவரான பொன்முடியும் அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இப்படி பல அழுத்தங்களுக்கு மத்தியில் திமுக பொதுக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், திமுகவின் 4வது பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதே போல, டி.ஆர்.பாலு திமுகவின் 8வது பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, திமுகவின் துணை பொதுச் செயலாளராக ஆர்.ராசாவும் பொன்முடியும் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், பொதுக்குழுவில், உயிரிழந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுக்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு இன்னும் 8 மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி எனக் கூறிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

தீர்மானம் : 1

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் – பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர்க்கும்; துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி – திரு. ஆ.இராசா ஆகியோர்க்கும் வரவேற்பும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் : 2

பேரிடர் காலத்திலும் சீரிய முறையில் உழைக்கும் கழகத் தலைவர், கழகத் தோழர்கள், தன்னார்வலர்கள், மனிதநேயப் பண்பாளர்கள் அனைவர்க்கும் பாராட்டும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் : 3

அருந்ததியினர் உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமூகநீதித் தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் : 4

“மத்தியத் தொகுப்பிற்குத் தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு” – “இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது” (not bereft of substance) என்று, சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக இந்தப் பொதுக்குழு வரவேற்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடுத்த சமூகநீதிக்கான சட்டப் போராட்ட வழக்கில் – இந்தத் தலைமுறையை மட்டுமின்றி – எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்றும் தொலைநோக்குச் சிந்தனையும் சிறப்பும் கொண்ட இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு – முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்தளித்த வழியில் பாடுபட்டு, வழக்கில் வெற்றி பெற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு இதயம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களில், இந்தக் கல்வியாண்டே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டினையும், பட்டியலின மாணவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5

முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் : 6

இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில் சமூக ‘அநீதி’ – களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு கண்டனம் தெரிவ்க்கப்பட்டது.

தீர்மானம் : 7

“தேசிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை தமிழகத்தில் பேறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை இக்கூட்டம் நிராகரிக்கிறது. இந்தித் திணிப்பை மும்மொழித் திட்டத்தின் மூலம் தீவிரமாக்க மத்திய பா.ஜ.க. அரசு தந்திரமாகத் திட்டமிடுவதை இப்பொதுக்குழு ஆணித்தரமாக எதிர்க்கிறது. சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது.

ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது.

தமிழகத்தின் இருமொழித் திட்டத்திற்கு எதிரான இந்தக் கொள்கையை அ.தி.மு.க. அரசும் கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 8

சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐக் கைவிட வேண்டும் என வலிறுத்தப்பட்டுள்ளது.

தீர்மானம் : 9

அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் : 10

ஸ்டெர்லைட் ஆலை’துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுகு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீர்மானம் : 11

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க இயலாமல் – ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் போதும் – நிர்வாக ரீதியாகத் தோல்வியடைந்து – மக்களுக்குப் பெரிதும் தேவையான நிதி நிவாரணம் வழங்கிட சிறிதும் அக்கறையற்ற அ.தி.மு.க. அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 12

மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட; கழகத்தை ஆட்சிபீடம் ஏற்றிட; கழகத் தலைவரை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்திட; சூளுரை மேற்கொள்வோம்.

தீர்மானம் : 13

விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய- மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைககளையும் கைவிட்டு – விளைபொருள்களுக்கு நியாயமான உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும்- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும் முன்வர வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. என மொத்தம் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுகவுக்குள் பல அழுத்தங்களுக்கு மத்தியில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk general body meeting announced as general secretary durai murugan treasury tr balu deputy general secretaries a raja ponmudi

Next Story
‘இந்தி பட வாய்ப்பு கிடைத்தால் டீ-சர்ட்டை கழட்டிடுவாங்க’: ஆர்த்திBigg Boss Arthi Hindi Imposition Tweet
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com