திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 29-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் கடந்த வாரம் காலமானார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் படத் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தை திறந்து வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தற்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இருவர் பெயரும் அடிபடுகின்றன.
‘கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு’
திமுக பொதுக்குழுக் கூட்டம் 29-03-2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெறும்.
பொருள்: கழக பொதுச்செயலாளர் தேர்வு.#DMK #MKStalin pic.twitter.com/b6MPczljNi
— DMK (@arivalayam) March 15, 2020
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 29-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கல்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.
மார்ச் 29-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.