/indian-express-tamil/media/media_files/2025/05/31/1eW2u1Ixk5UAiAa9gWnB.jpg)
தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 1) மதுரையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, உத்தங்குடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் 90 ஏக்கரில் பரந்து விரிந்த பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பந்தலில் குளிர்சாதன வசதிகள், வண்ண விளக்குகள், பசுமை புல்வெளிகள், செயற்கை நீருற்றுகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நுழைவு வாயில், சென்னை அண்ணா அறிவாலயத்தை ஒத்த தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கட்-அவுட்கள், தி.மு.க. அரசின் சாதனைகளை சுட்டி காட்டும் பதாகைகள் மற்றும் 100 அடி உயர கொடிக்கம்பம் ஆகியவை அரங்கின் அமைப்பை கூட்டுகின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன் உள்ளிட்டோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் தனியார் நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கிறார்.
மாலை, அவ்விடமிருந்து கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இந்த ரோடு ஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், டி.வி.எஸ்.நகர், பழங்காநத்தம், வ.உ.சி. பாலம், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ரோடு ஷோவின் ஒரு பகுதியாக ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளார் முதல்வர். அப்போது, வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மேற்கூரையையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மேயர் முத்து சிலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வெண்கல சிலையை திறந்து வைக்க உள்ளார்.
நாளைய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் தலைமையில் பல முக்கிய அரசியல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் வரும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதே நேரத்தில் முதல்வர் பயணிக்கும் பகுதிகளில் ட்ரோன் பறக்க விட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.