தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும் என திமுக பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
முக்கிய தீர்மானங்கள் :
பொதுச்செயலாளருக்கு பதிலாக தலைவரே கழக சட்டதிட்டங்கள் மற்றும் முடிவுகளை அறிவிக்கும் அதிகாரம்
இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் கழக அமைப்பு பொறுப்பு வகிக்க முடியாது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைப்பு செய்து கொள்ளலாம்.
அகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தைப் போலவே அங்கும் செயற்குழு, பொதுக்குழு அமைத்துக் கொள்ளலாம்.
இணையத்தின் மூலமாகவும் கழக உறுப்பினராக சேரும் வகையில் சட்டத்திருத்தம். அப்படி சேருபவர்களுக்கும் இனி வாக்குரிமை உண்டு.
பத்து பஞ்சாயத்துகளுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்.
ஊராட்சிக்கு ஒரு கிளைச் செயலாளர் முறை அமலுக்கு வருகிறது.
திருநங்கைகளும் இனி உறுப்பினராக சேரலாம்.
இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் ஸ்டாலின் பேசியதாவது, கூட்டாட்சி அமைப்பு முறையை திமுக வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைப்பதை ஏற்காது. மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு தன் கையில் வைத்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் பின்பற்ற வேண்டும். தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும் என்று அவர் பேசினார்.