ஸ்டாலின் தங்கியிருந்த இடத்தில் ஐடி ரெய்டு நடத்துவதா? துரைமுருகன் கண்டனம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த இடத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்துவதா? என்று கேள்வி எழுப்பிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் உள்ள வீடு, கல்லூரி, கெஸ்ட் ஹவுஸ், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
Advertisment
தேர்தல் நடைபெற்றிருக்கின்ற சூழலில் எதிர்க்கட்சியில் மூத்த தலைவர் எ.வ.வேலு வீடு அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில், எ.வ.வேலுவுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கிருந்தபோது வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த இடத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்துவதா? என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 25) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எ.வ.வேலு இல்லத்திலும் அவரது மருத்துவமனையிலும் இன்னும் பல்வேறு இடங்களில் அவர்கள் ரெய்டு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு ரெய்டு செய்வதற்கு உரிமை உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது செய்திருக்கின்ற இந்த ரெய்டு, அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டிருப்பதாகவே திமுக கருதுகிறது. ஏனென்றால், எ.வ.வேலுவுடன் வீடுகளையோ தோட்டங்களையோ துறவுகளையோ கல்லூரிகளையோ ரெய்டு செய்தது மட்டுமல்லாமல், அவருடைய கெஸ்ட் ஹவுஸில் மு.க.ஸ்டாலின் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருக்கிறபொழுது ரெய்டு நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. அங்கே எந்தவிதமான பொருளும் இல்லை. ஆனால், அவர்கள் அங்கே கைப்பற்றுவதற்கு விலை உயர்ந்த விலை மதிப்பற்ற ஒன்று இருந்தது. அதுதான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர்கள் ரெய்டில் அதை கைப்பற்றவில்லை.
ஒரு பெரிய தலைவர், இன்றைய எதிர்க்கட்சி தலைவர், இன்னும் 2 மாதத்தில் இந்த நாட்டை ஆளப்போகிறவர். அவர் தங்கியிருக்கிறார் என்ற ஒரு நாகரிகம் கூட இல்லாமல், அங்கே அவருடைய அறை உள்பட எல்லா இடங்களையும் ரெய்டு செய்து பார்த்திருக்கிறார்கள். இது வேண்டுமென்றே, அவர்கள் தோற்றுப்போய்விடுவோம் என்று பயந்த அதிமுக பலம் வாய்ந்த பாஜக கையில் இருக்கிற வருமானவரித் துறையை தூண்டிவிட்டு சோதனை செய்திருக்கிறார்கள். இதனால், திமுகவினர் துவண்டுவிடமாட்டார்கள். மேலும், உற்சாகத்தோடு பணியாற்றுவார்கள். திமுகவை தேர்தல் களத்தில் அதிமுகவும் அவர்களின் தோழமையான பாஜகவும் உள்ள காரணத்தால், இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இது ஜனநாயக மரபுக்கு உகந்தது அல்ல. நாகரிகமானதும் அல்ல. இதற்கு எங்கள் கண்டனத்தை பலமாக திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில், அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.