Advertisment

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு கிள்ளிக் கொடுத்த திமுக

கூட்டணி கட்சிகள் திமுக கொடுக்கிற இடங்களை வாங்கிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கலாம். ஆனால், இந்த போக்கு திமுகவுக்கும் நல்லது இல்லை. கூட்டணிக்கும் நல்லது இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
local body elecitons, tamil nadu 9 district local body elections, vellore district local body election, உள்ளாட்சி தேர்தல், தமிழ்நாடு, 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல், திமுக, கிள்ளிக் கொடுத்த திமுக, காங்கிரஸ், முக ஸ்டாலின், துரைமுருகன், காங்கிரஸ் வருத்தம், கேஎஸ் அழகிரி, dmk gives very few seats to alliance parties, congress, dmk, mk stalin, durai murugan, congress ks alagiri, vck, cpi, cpm

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து அதிர்ச்சி அளித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 2020ல் நடைபெற்றது. இதில், புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் நிறைவடையாததால் இந்த வாட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், அண்மையில், இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இடப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

அதே போல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக இந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.

ஆனால், திமுக கூட்டணி இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. திமுக தலைமை, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகளுடன் இடப் பங்கீடு குறித்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை இறுதி செய்து அனுப்ப கேட்டுக்கொண்டது.
செப்டம்பர் 22ம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். 23ம் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் என்றும் 25ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாவட்ட செயலாளர்கள் இடப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் இடங்களை அளித்து அதிர்ச்சி அளித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன் கூறுகையில், “1996ல் திமுக மற்றும் தாமக கூட்டணியில் இருந்தபோது 1996, திமுக உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்களை ஒதுக்கியது. உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணி 95 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பதிவு செய்தது. இப்போது, ​​திமுக தலைவர்களின் கூட்டணி கட்சிகள் மீதான அணுகுமுறை ஏற்கெனவே தொண்டர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.. திமுகவின் மாநிலத் தலைமை தலையிடாவிட்டால், இந்த பிரச்சனை தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும் என்று அவர் கூறினார்.

ஆனால், திமுக தரப்பில், 1996 உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தது. இப்போது, ​​கூட்டணியில் ஒன்பது கட்சிகள் இருக்கிறது. உள்ளூர் தலைவர்கள் மட்டுமே உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் திறனை அறிந்திருக்கிறார்கள். எனவே, முடிவெடுக்கும் உரிமையை மாவட்ட தலைவர்களிடம் விட்டுவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலில், இடங்களின் சதவீதம் எடுபடாது. வேட்பாளரின் ஆளுமை மட்டுமே செல்வாக்கு செலுத்தும்.” என்று தெரிவிக்கின்றனர்.

இருப்பினு, இந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆரம்பத்தில் 30 சதவீத இடங்களைக் கேட்டது. பின்னர், குறைந்த பட்சம் 10 சதவிகித இடங்களாவது தர வேண்டும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போது, ​​2 சதவீதத்துக்கு குறைவாகவே இடங்கள் தருவதாகக் கூறுகிறார்கள் என்று வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் எதிர்வினை உண்டு. இதற்கான பலனை வாக்கு எண்ணும் நாளில் தெரியும் என்று கூறுகிறார்கள். இப்படி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் மிகவும் மிகவும் குறைவான இடங்களைப் பெறுவதைவிட தனித்து போட்டியிடலாம் என்பதே முக்கிய தலைவர்கள் பலரின் விருப்பம்” என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவின் மாநில பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள 138 ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் காங்கிரஸுக்கு 3 இடங்களும் வி.சி.கவுக்கு 1 இடமும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 1 இடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வேலூர் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி குறைந்த பட்சம் 15 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் 3 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த பட்சம் 5 சதவீத இடங்களை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்போது 1 சதவீதம் இடமே கிடைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு கறாராக கிள்ளிக் கொடுக்கிறார்கள். கூட்டணி கட்சிகள் திமுக கொடுக்கிற இடங்களை வாங்கிக்கொள்கிற நிர்பந்தத்தில் இருக்கலாம். ஆனால், இந்த போக்கு திமுகவுக்கும் நல்லது இல்லை. கூட்டணிக்கும் நல்லது இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Local Body Election Congress Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment