11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தள்ளுபடி: மேல்முறையீடு செய்ய திமுகவிற்கு அனுமதி!

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய திமுக தரப்பிற்கு அனுமதி

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தனர். இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்குப் பதிந்த திமுக கொறடா சக்கரபாணி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “சபாநாயகர் செய்ய வேண்டிய பணியை நீதிமன்றம் செய்ய முடியாது. ஓபிஎஸ் எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி நீதிமன்றத்தை பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது. சபாநாயகரின் அதிகார வரம்பில் நீதிமன்றம் தலையிட முடியாது. உத்திரவிட முடியாது. 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக திமுக தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.

×Close
×Close