Advertisment

பட்டினப் பிரவேசத்துக்கு திமுக அரசு தடை; எதிரெதிராக அணிவகுக்கும் பகுத்தறிவுவாதிகள் - இந்துத்துவர்கள்

தருமபுரம் ஆதீனம் திருமடத்தால் நடத்தப்படும் 'பட்டின பிரவேசம்' நிகழ்ச்சியின்போது, ​​பக்தர்கள் தருமபுரம் ஆதீன கர்த்தரை வெள்ளிப் பல்லக்கில் சுமந்து செல்கின்றனர். இதற்கு திமுக அரசு தடை விதித்துள்ளதால் பகுத்தறிவுவாதிகள் - இந்துத்துவர்கள் எதிரெதிராக அணிவகுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
DMK, ban on Mayiladuthurai mutt ritual, Mutt ritual, பட்டினப் பிரவேசத்துக்கு திமுக அரசு தடை; தருமபுரம் ஆதீனம், மயிலாடுதுறை, பாஜக, பகுத்தறிவாளர்கள், Mayiladuthurai mutt ritual, Tamil Nadu, Trichy mutt, Dharmapuram mutt, political pulse, Tamil indian express

தருமபுரம் ஆதீனம் திருமடத்தால் நடத்தப்படும் 'பட்டின பிரவேசம்' நிகழ்ச்சியின்போது, ​​பக்தர்கள் தருமபுரம் ஆதீன கர்த்தரை வெள்ளிப் பல்லக்கில் சுமந்து செல்கின்றனர். இதற்கு திமுக அரசு தடை விதித்துள்ளதால் பகுத்தறிவுவாதிகள் - இந்துத்துவர்கள் எதிரெதிராக அணிவகுத்துள்ளனர்.

Advertisment

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திருமடத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பகுத்தறிவாளர்களும் இந்துத்துவா குழுக்களும் இரு தரப்பிலும் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

தருமபுரம் ஆதீனம் திருமடத்தால் நடத்தப்படும் 'பட்டின பிரவேசம்' நிகழ்ச்சியின்போது, ​​பக்தர்கள் தருமபுரம் ஆதீன கர்த்தரை வெள்ளிப் பல்லக்கில் சுமந்து செல்கின்றனர்.

பல்லக்கில் சுமந்து செல்வதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மே 22-ஆம் தேதி நடைபெறவிருந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நிறுத்துமாறு மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ.) ஜே.பாலாஜி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பல்லக்கில் சுமந்து செல்லும் இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை ‘மனித உரிமை மீறல்’ என்று கூறியதோடு, ஏன் யாரையாவது பல்லக்கில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நிலையில், மாநிலத்தில் உள்ள பகுத்தறிவாளர்கள், தமிழகத்தில் கையால் இழுக்கும் ரிக்‌ஷாவை ஒழித்ததைப் போல இந்த நடைமுறையையும் ஒழிக்க முற்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மாநிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக இந்து மத நம்பிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் பல முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியடைந்த கட்சியான பாஜக, வேகமாக இந்த விவகாரத்தில் குதித்துள்ளது. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செவ்வாய்க்கிழமை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பல்லக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களால் சூழப்பட்ட ஒரு பெரிய, அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் - அது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழக மாநாட்டின் போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி தொடர்பாக தடை விதிக்கப்பட்ட அரசாணையை தருமபுரம் மடத்தலைவரிடம் ஒப்படைத்ததையடுத்து, தடையை நீக்கி, அமைதியான முறையில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தக் கோரி இந்து அமைப்பினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பக்தர்கள் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது.

தருமபுரம் மடத்தில் இதற்கு முன்பு இருந்த ஆதீனம் இறந்ததைத் தொடர்ந்து தற்போதைய தருமபுரம் ஆதீனமான மாசிலாமணி ஞானசம்பந்த பிரமாச்சார்யா சுவாமி பொறுப்பேற்றபோது, ​​கடந்த 2019 டிசம்பரில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டினப் பிரவேசம் தடை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மதுரை ஆதீனத்தின் தலைவரான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தடையை நீக்கி, பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். இல்லை என்றால் தருமபுரத்தில் பல்லக்கை தானே தோளில் சுமப்பேன் என்று கூறினார்.

“தர்மபுரம் ஆதீனம் தமிழ் மற்றும் சைவ மரபுகளைப் பாதுகாத்து பாலமாக வைத்த மரபு ஆகும். தருமபுரம் ஆதீனத்தை எனது குருவாகவும், ஆசிரியராகவும் கருதுகிறேன். கடந்த 500 ஆண்டுகளாக எனது குரு பல்லக்கில் வந்து கொண்டிருந்தார், இப்போது ஏன் எதிர்ப்பு எழுகிறது? இதில், ஆளுநரின் பங்குதான் இதற்குக் காரணம் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் கூறினார். ஆளுநர் ஆர்.என். ரவியின் அண்மையில், தருமபுரம் ஆதீனம் மடத்திற்குச் சென்றதைக் மதுரை ஆதீனம் குறிப்பிடுகிறார்.

அண்மையில் ராஜ்பவனில் நடந்த நிகழ்வுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்ததன் மூலம், தமிழ்நாடு அரசும் ஆளுநரும் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன், தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி சென்றிருந்தார். அங்கே, அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பட்டினப் பிரவேசத்துக்கு கடந்த அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறிய மதுரை ஆதீனத் தலைவர், “ஒருமுறை காசியில் ஒரு ஆதீனம் தலைவர் இறந்தபோது, காங்கிரஸ் ஆட்சியும், அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் அவரது அஸ்தியை எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர். இந்தப் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி ஆங்கிலேயர்களாலோ அல்லது கலைஞராலோ ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அதுதான் அவர்கள் தருமபுரம் ஆதீனத்துக்கு கொடுத்த மரியாதை” என்று கூறினார்.

தருமபுரம் ஆதீனம் உட்பட மாநிலத்தின் பல்வேறு மடங்களைச் சேர்ந்த தலைவர்கள் குழு ஸ்டாலினைச் சந்தித்து, மாநிலத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குத் தேவையான ஆதாரங்களை வழங்கியதற்காக அரசாங்கத்தைப் பாராட்டிய ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் மடத்துக்கும் இடையிலான மோதல் வெளியே வந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment