தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், திருவாரூரில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து 18 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கார்ப்பரேட்டுகளின் அரசாக மாறிவிட்டதாக பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டினார்.
பி.ஆர். பாண்டியன் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்:
நில ஒருங்கிணைப்புச் சட்டம்: தி.மு.க. அரசு கொண்டுவந்த நில ஒருங்கிணைப்புச் சட்டம், விவசாயிகளின் நில உரிமையைப் பறித்துவிட்டது. இதனால் குத்தகை விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாமலும், கடன் பெற முடியாமலும் நில அபகரிப்பாளர்கள் என்ற அச்சத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை 2008-லேயே தி.மு.க. அரசு வங்கிகளாக மாற்றியதால், அவை இப்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. இதன் விளைவாக, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சிபில் ஸ்கோர் (CIBIL Score) உள்ளிட்ட 12 சான்றிதழ்களைக் கேட்டு விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிப்காட் அமைத்தல்: சிப்காட் (SIPCOT) அமைக்கும் பெயரில் விளைநிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றி, நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முல்லைப் பெரியாறு அணை: முல்லைப் பெரியாறு அணையில் 'ரூல் கர்வ்' (Rule Curve) முறையை தி.மு.க. அரசு அனுமதித்ததால், சாதாரண பருவமழை காலங்களில் கூட 142 அடி தண்ணீரைச் சேமிக்க முடியாத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பி.ஆர். பாண்டியன் சுட்டிக்காட்டினார்.
ராசி மணல் அணை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்ததற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்த பி.ஆர். பாண்டியன், "விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மிகுந்த தேர்தலாக 2026 தேர்தல் அமைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அரசாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு எங்கள் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் மாநில துணைச் செயலாளர் எம். செந்தில்குமார் உடனிருந்தனர்.