பதினாறாவது சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில், 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் ‘கிராமசபை மற்றும் வார்டு’ கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது.
இந்நிலையில்,திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமயில் தொண்டாமுத்தூர் தொகுதி-தேவராயபுரம் ஊராட்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
சபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்திற்குள் இருந்த பெண் ஒருவர் எழுந்து நின்று மு. க ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். ஒரு வகையான பதட்டத்தையும் ஏற்படுத்த முயன்றார்.
" உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. அமைச்சர் வேலுமணி உங்களை அனுப்பி வைத்துள்ளார். உரிய முறையில் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள் " என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
இதற்கிடையே, கூட்டத்திற்கு வெளியே வந்து அமைச்சருடன் அவர் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, மு. க ஸ்டாலின் தனது உரையில், " சகோதரி ஒருவர் கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தார். இந்த கூட்டத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் வேலுமணியின் திட்டமிட்ட செயல். ஒரு கூட்டத்தை தடுக்க முயற்சி எடுத்தால், அதிமுக எந்த கூட்டத்தையும் நடத்த முடியாது. திமுக கட்டுப்பாடு உள்ள கூட்டம். அதன், காரணமாக தற்போது எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டோம்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கிராமசபை கூட்டத்தில் கலவரம் செய்ய அதிமுக மகளிர் பாசறையைச் சேர்ந்தவர் என்றும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பியவர் என்று திமுக தகவல் தொழிநுட்ப பிரிவு தெரிவித்தது.
அதிமுக தகவல் தொழிநுட்பக் பிரிவு தனது ட்விட்டர் பதிவில், "திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணை அநாகரிகமாக கையைப் பிடித்து
இழுத்த திமுகவினர், கேள்வி கேட்ட பெண்ணை வெளியேறுமாறு கூறிய ஸ்டாலின். தடையை மீறி திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டத்தில் அராஜகம்" என்று தெரிவித்தது.
மக்கள் கிராம சபை கூட்டத்தைக் கடந்த 23-ஆம் தேதியிலிருந்து திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. வரும், 10-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தனி நபரோ அல்லது அரசியல் கட்சிகளோ கூட்டத்தைக் கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது. சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன என தமிழக அரசு தெரிவித்தது.