ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தின் கீழ், திமுக உறுப்பினர் சேர்க்கைப் பணிகளின் போது மக்களிடமிருந்து ஒடிபி (OTP) எண்களைப் பெறுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களிடம் இருந்து OTP எண்கள் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதை கடுமையாகக் கண்டித்து, OTP பெறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தையும் ஒரு பிரதிவாதியாகச் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் உள்ளிட்ட தனிநபர் விவரங்களைச் சேகரிக்கும் நிறுவனங்கள் அவற்றை விற்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? சேகரிக்கப்படும் தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் தனிநபர் தரவுகளை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட OTP உள்ளிட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.