திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு 5 தீர்மானங்கள் : ஆ.ராசா, கனிமொழிக்கு பாராட்டு

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 29) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :

தீர்மானம்1 : 2ஜி எனும் மாயாவி – காற்றில் கரைந்த கற்பனைக் கணக்கு!

நாட்டின் பன்முகத்தன்மைக்கும், சமூகநீதிக் கொள்கைக்கும் உறுதியுடன் போராடி மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்குத் துணை நிற்கும் சாமான்யர்களின் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை அவமானப்படுத்தி, நிலைகுலைய வைத்திட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சில ஆதிக்க சக்திகள், மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஏழை எளிய, நடுத்தர மக்களும் குறைந்தக் கட்டணத்தில் தொலைபேசியைப் பயன்படுத்திட மேற்கொண்ட சாதனைகளை அப்படியே திரைபோட்டு மறைத்து, 1.76 லட்சம் கோடி ரூபாய் என்று கற்பனைக் கணக்கு ஒன்றை, கருத்தியல் ரீதியாக இழப்பு என உருவாக்கி, அலைக்கற்றை ஊழல் என்று ஊதிஊதிப் பெரிதாக்கி, விண்ணுக்கும் மண்ணுக்குமாக எகிறிக் குதித்து, விளம்பரம் செய்து வழக்கைத் தொடுத்தார்கள்.

ஆவணங்களின் அடிப்படையிலேயே மத்திய புலனாய்வுத் துறையின் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், மாநிலங்களவைக் குழுத்தலைவர் கனிமொழியும், ஒரு சிலரைப் போல் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் “வாய்தா மேல் வாய்தா” வாங்கி வழக்கை இழுத்தடித்ததைப் போல அல்லாமல், ஒருமுறை கூட “வாய்தா” வாங்காமல் வாதாடி, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று அய்யந்திரிபற நிரூபித்துள்ளார்கள்.

சிறைவாசம் இருந்தாலும் சிறிதும் கலங்காமல் தங்கள் தரப்பு வாதங்களை ஆணித்தரமாக நீதிமன்றத்தில் முன்வைத்து விடுதலை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கழக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி ஆகியோருக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

எத்தனை சக்திகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழிசுமத்த எந்த வடிவத்தில் முயன்றாலும், வேண்டுமென்றே இட்டுக்கட்டி, பொய்யாக புனையப்பட்ட “கற்பனைக் கணக்கு” இப்போது காற்றில் கரைந்து விட்டது. கலைஞர் தொலைக்காட்சி மீது சுமத்தப்பட்ட 200 கோடி ரூபாய் குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் மீதும், நீதித்துறையின் மாண்பு மற்றும் சுதந்திரத்தின் மீதும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும், மதிப்பிற்கும் இந்த தீர்ப்பு மேலும் உரமூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நியாயத் தீர்ப்பின் மூலம் புடம் போட்ட தங்கமாக “விஸ்வரூபம்” எடுத்து நிற்கிறது என்று இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

தீர்மானம் 2 : பணமழைக்கிடையேயும் தேர்தல் ஜனநாயகத்தைப் போற்றிய கழகம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், “பணநாயகப் படையை” எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் “ஜனநாயகப் பாதுகாப்புப் படை” போராட வேண்டும் என்றும், தேர்தல் கூட்டணி, வாக்காளர் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் போன்றவற்றை முன்வைத்து, ஜனநாயக மரபு வழிநின்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கழகத்தின் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எடுத்த உறுதியான நிலைப்பாட்டை இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு வரவேற்று, முழு மனதுடன் பாராட்டுகிறது.

வாக்காளர்களுக்குப் “பத்தாயிரம் ரூபாய்” என்றும், “ஆறாயிரம் ரூபாய்” என்றும் மக்களிடம் கொள்ளை அடித்தபணம் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருந்த நிலையிலும், தேர்தல் ஜனநாயகம் ஆரோக்கியமாகவும், ஆக்கபூர்வமாகவும் நிலைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக கழகம் களத்தில் போராடியது. தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த முறையீடுகள் முழுவதும் செயலிழக்க வைக்கப்பட்ட சூழ்நிலையிலும், திராவிட முன்னேற்றக் கழகம் மனம் தளராமல் ஜனநாயகரீதியில் தேர்தலைச் சந்தித்தது.

“தேர்தல் முறைகேடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் ஆர்.கே.நகரில் கொட்டித்தீர்த்த பணமழையை தேர்தல் ஆணையமும், மாநில அரசு இயந்திரமும் செயலற்றுப்போய், எது நடந்தாலும் நமக்கென்ன என்று வேடிக்கைப் பார்த்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டில் கொள்கை வழி கூட்டணியுடன் நின்று, வாக்காளர்களைத் தொடர்ந்து சந்தித்தது.

24.12.2017 அன்று வெளிவந்த தேர்தல் முடிவு கழகத்தின் ஜனநாயக போராட்டத்தில் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய பணியை நடுநிலையாளர்களும், இளைஞர்களும் மனப்பூர்வமாக வரவேற்பதை இந்தக்குழு உணருகிறது.

கழகத்திற்கு ஆர்.கே.நகரில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு முற்றிலும் தற்காலிகமானது என்பதோடு, இது அடுத்துக் கழகத்திற்குக் கிடைக்கப் போகும் தேர்தல் வெற்றிக்கான படிக்கட்டாகவே இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கருதுகிறது. எந்தப் பெயரில் வலம் வந்தாலும் இரு ஊழல் அணிகளுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை. ஒன்றுசேர்ந்து கொள்ளையடித்தவர்கள் வேறு வேறு திசைகளில் எதிரும் புதிருமாக நின்றாலும், தமிழகத்தில் மக்களுக்காக உழைத்திடும் நல்லாட்சி அமைவதற்கு ஒரே மாற்று திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்ற கள நிலவர உண்மை மக்கள் உள்ளத்தில் உறைந்து கொண்டிருப்பதை இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு உணரும் அதேநேரத்தில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்து தேர்தல் ஜனநாயக படுகொலை செய்த வேட்பாளர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 : தேர்தல் பணியாற்ற தவறியவர்கள் மீது நடவடிக்கை!

திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக் கொண்ட உன்னதக் கொள்கை நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கழகத் தொண்டர்களும், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் பணியாற்றியதையும், தொடர்ந்து பெய்த பணமழைக்கு இடையிலும் கழகத்திற்கு வாக்களித்தோரின் அன்பையும், இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.

அதேநேரத்தில், “ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” என்பதைப் போல, கழகத்தில் சிலர் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வகுத்துக் கொடுத்த அறவழியில் செயல்படவில்லை என்ற தகவல்கள் செயல் தலைவர் தளபதி அவர்களுக்கு வந்திருப்பதால், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கழகத்தினரின் செயல்பாடு குறித்து” ஆய்வு செய்ய, கழக சட்டமன்ற கொறடா சக்ரபாணி உள்ளிட்ட மூன்று நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தனது அறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், ஆய்வு செய்து, தேர்தல் பணியாற்றத் தவறிய கழகத்தினர் எப்பொறுப்பு வகித்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 4 : புயல் நிவாரணத்திற்கு ரூ.13,520 கோடி நிதியை உடனடியாக வழங்குக!

கன்னியாகுமரி மாவட்டத்தை 29.11.2017 அன்று கடுமையாகத் தாக்கிய “ஒகி” புயலால் மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்திற்கு கழக உயர்நிலை செயல்திட்டக்குழு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. புயலின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகி சொல்லொணாதத் துயரத்தில் தவிக்கும் வாழை, ரப்பர் மற்றும் தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கும், அம்மாவட்ட மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில், மீட்புப் பணிகளிலும், சீரமைப்புப் பணிகளிலும் ‘குதிரை பேர’ அதிமுக அரசு காட்டி வரும் அலட்சிய மனப்பான்மைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

29 நாட்கள் கழித்து, சேதப்பகுதிகளை பார்வையிட்டுள்ள மத்திய குழு, நிவாரணத்திற்காக தமிழக அரசு கோரியிருக்கும் 13,520 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தைத் “தேசிய பேரிடர்” மாவட்டமாக அறிவித்து, சிதிலமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைத்திடும் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய முழுமையான நிவாரணம் கிடைப்பதற்கும், காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை ஒளிவு-மறைவின்றி வெளியிடவும், மத்திய – மாநில அரசுகள் இதுவரை ஏனோதானோவென்று காலம் கடத்தி வந்ததைப் போல் இனியும் காலதாமதம் செய்யாமல், போர்க்கால அடிப்படையில் வேகமான, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5 : பெரும்பான்மையை இழந்து, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான அ.தி.மு.க அரசு -ஜனநாயத்தின் களங்கம்!

தமிழக சட்டமன்றத்தில் குறைந்தபட்சம் பெரும்பான்மையாக 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவினையாவது பெற்றிருக்க வேண்டிய அதிமுக அரசுக்கு, 111 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையமே தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், பெரும்பான்மையை இழந்து விட்டுள்ள அதிமுக அரசு இனியும் தொடர்வது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், மாநில நலனுக்கு விரோதமானதும் ஆகும்.

அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் நிர்வாகப் பொலிவிழந்து, ஒட்டுமொத்த மாநில ஆட்சியே உளுத்துப்போய் உருக்குலைந்து விட்டது. மாநில முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, வேளாண்மை, மீன்பிடித் தொழில், நெசவுத்தொழில் என எல்லாமே முடங்கி, வேலை இல்லாத் திண்டாட்டம், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, எங்கும் எதிலும் ஊழல் என கொள்ளைப் பேய் தலைவிரித்தாடுகிறது.
தத்தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும், கொள்ளையடிப்பதைத் தொடர்கதையாக நீட்டிக்கவும், மாநில உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து, சட்டமன்ற பெரும்பான்மையை இழந்து, தமிழகத்தின் தன்மானத்தையும், தனிச்சிறப்பையும் காவு கொடுத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு நீடிப்பது இந்திய அரசியல் சட்டத்தையும், பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் கேலிக்கூத்தாக்கிடும் தீமையாகும்.

ஆகவே, தமிழகத்தில் நடக்கும் இந்த கேலிக்கூத்தை, இந்தியாவில் உள்ள அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும், மத்திய அரசும் கண்டும் காணாமல் இருப்பது நாம் கட்டிக்காத்து வரும் ஜனநாயகத்திற்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றில் என்றும் மாறாத வடுவை ஏற்படுத்தி விடும் என்று இந்த உயர்நிலைச் செயல் திட்டக்குழு, மிகுந்த மனச்சுமையோடு சுட்டிக்காட்டிட விரும்புகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close