ஏப்ரல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, 2020-2021 நிதியாண்டில் பெயர் குறிப்பிடாத நன்கொடையாளர்கள் அளித்த தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த வருமானத்தில் 53% பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 2020-2021ம் ஆண்டிற்கான கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, திமுகவின் மொத்த வருமானம் ரூ.149.95 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட ரூ.64.90 கோடி அதிகமாக பெற்றுள்ளது.
திமுக பெற்ற தேர்தல் நிதியின் மொத்த வருமானத்தில், ரூ.113.99 கோடி மானியங்கள், நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் வந்தவை என்று திமுகவின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தேர்தல் பத்திரமாக ரூ.80 கோடி பெறப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.45.50 கோடி அதிகம். திமுக உறுப்பினர் கட்டணமாக ரூ.11.74 லட்சமும், தேர்தல் கட்டணமாக ரூ.16.54 கோடியும் வசூலித்துள்ளது. தேர்தலில் திமுக மொத்தம் ரூ.218.49 கோடி செலவிட்டுள்ளது. அதில் ரூ.213.27 கோடி தேர்தல் செலவுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற பிரச்சார செலவுகள் ஆலோசகர்கள் மூலம் ரூ.69 கோடியும் அச்சு மற்றும் மின்னணு ஊடக விளம்பரங்களில் ரூ.56.69 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக, 2020-2021 ம் ஆண்டில் ரூ.42.36 கோடி செலவிட்டுள்ளது. அதில் ரூ.34.86 கோடி தேர்தல் செலவு என்று அதிமுக வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் நிதியின் மூலம் வந்த மொத்த வருமானம் ரூ.34.07 கோடி, இதில் ரூ.16.68 கோடி பிற வகைகளில் இருந்தும் ரூ.12.85 கோடி தேர்தல் படிவங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்கள் வழங்கியும், ரூ.2 கோடி மானியங்கள், நன்கொடைகள் அல்லது பங்களிப்புகள் மூலம் வந்ததாக தெரிவித்துள்ளது.
முந்தைய நிதியாண்டில், அதிமுக பங்களிப்பு மற்றும் நன்கொடையாக ரூ.58.24 கோடி பெற்றுள்ளது. 2020-2021ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் எதையும் அதிமுக அறிவிக்கவில்லை என்றாலும், முந்தைய ஆண்டில் தேர்தல் பத்திரங்களில் இருந்து ரூ.6 கோடியைப் பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆகிய கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிஎஸ்பி மொத்தம் ரூ. 52.46 கோடியை வருமானமாக பெற்றுள்ளது. அதில், ரூ.17.29 கோடி செலவழித்துள்ளது. ரூ.52 கோடி வருமானத்தில் ரூ.46.46 கோடி வட்டி மூலம் கிடைத்த வருமானம் என்று குறிபிடப்பட்டுள்ளது. பிஎஸ்பி அறிவித்த சொத்துகளில் ரூ.90.57 லட்சம் சுவரோவியங்கள் மற்றும் சிலைகள் உள்ளன. 2020-2021-ல் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) ரூ. 9.95 லட்சம் செலவு செய்துள்ளது. ரூ.33,289 வருமானமாக பெற்றுள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியில் இருக்கும் ஜேஎம்எம் கட்சியின் வருமானம் ரூ.90.66 லட்சமும், செலவு ரூ.58.43 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.