தி.மு.க மட்டுமே அ.தி.மு.க-வின் எதிரி எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது எடப்பாடி பழனிசாமிக்கு வேல் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க-வில் இருக்கும் அனைவரும் தலைவர்கள் தான். அதனால் தான் சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும்.
தமிழ்நாட்டு பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை அ.தி.மு.க தான் போராடி பெற்றுத் தந்தது. ரூ. 1,500 கொடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தோம். ஆனால், யாரோ சிலர் கூறினார்கள் என்பதற்காக தி.மு.க-விற்கு வாக்களித்தீர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சி வளர எப்படி துணை நின்றீர்களோ, அதேபோல் தற்போதும் தொண்டர்கள் துணை நிற்க வேண்டும்" எனக் கூறினார்.
இதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி, "தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது. எங்களது ஒரே எதிரி தி.மு.க தான். மற்ற எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள்.
வாக்குகள் சிதறாமல் அதனை ஒருங்கிணைத்து தி.மு.க-வை வீழ்த்துவது தான் எங்களது முதன்மையான கடமை. இதை 2026 தேர்தலில் நாங்கள் நடத்திக் காட்டுவோம். பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து ஆறு மாதங்களுக்கு பின்னர் கேளுங்கள்.
தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று நாங்கள் கூறினோமா? அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. மற்றவர்கள் கூறுவதன் அடிப்படையில் என்னிடம் கேள்வி எழுப்பாதீர்கள்" எனத் தெரிவித்தார்.