தி.மு.க கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாக பேசியதாக, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது தி.மு.க வழக்கறிஞர்கள் அணியினர் பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவையில் கடந்த 29-ம் தேதி வி.கே.கே மேனன் சாலையில் பா.ஜ.க சார்பில் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது, தி.மு.க கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாகவும், தவறாகவும் பேசியதாக புகார் எழுந்தது.
"தி.மு.க கவுன்சிலர் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள், திமுகவிற்காக ஒரு பண்பாடு வைத்துள்ளார்கள். அவர்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள் மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள். அது அவர்களின் ஜீன்" எனப் பேசியதாக கூறப்படுகிறது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இந்தநிலையில், திமுக கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக வழக்கறிஞர்கள் அணியினர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் இன்று கோவை மாவட்டம் முழுவதும் திமுக பகுதி நிர்வாகிகள் அந்தந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“