பொன்விழா காணும் திமுக தலைவர் கருணாநிதி: 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார்!

பொன்விழா நாயகரின் புகழைப் புவியெங்கும் எதிரொலிக்கப் பாடிப் பூரிப்படைவோம்.

By: Updated: July 27, 2018, 09:52:18 AM

தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சித் தலைவர் மு.கருணாநிதி, இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை  கொண்டாட வேண்டும் என்று   திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் கருணாநிதி. அன்றிலிருந்து இன்று வரை திமுகவின் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இந்த பொன் விழாவை கொண்டாடு வகையில் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் ஸ்டாலின் கூறியிருப்பது, “ திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை தமிழ் மக்களுக்காக உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் தன் தோளில் சுமக்கும் பொறுப்பை ஏற்றவர் நம் அருமைத் தலைவர் கலைஞர் அவர்கள். 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் கழகத் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.

பேரறிஞர் அண்ணா காலம் வரை கழகத்திற்குத் தலைவர் பதவி இல்லை. “நான் கண்ட தலைவரும், கொண்ட தலைவரும் பெரியார் ஒருவரே” என்றுரைத்து, அந்தப் பதவியை தனது தலைவரான தந்தை பெரியாருக்குக் காலியாக விட்டுவிட்டு, கழகப் பொதுச்செயலாளராக அறிஞர் அண்ணா அவர்கள் பொறுப்பு வகித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, தி.மு.கழகத்தை எப்படியும் வீழ்த்திவிடலாம் என இன எதிரிகள் பகல் கனவு கண்டிருந்த வேளையில், தமிழர் நலன் காக்கும் இயக்கமான தி.மு.கழகம் வலிமையுடன் இருக்க வேண்டுமென்றால் தலைவர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை கழக நிர்வாகிகள் பலரும் வலியுறுத்த, அந்தப் பொறுப்புக்குத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் பொருத்தமானவர் என்பதை தந்தை பெரியார் அவர்களே வெளிப்படையாக அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து, கழக சட்டத்திட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, உள்கட்சி ஜனநாயக மரபுகளையொட்டி, கலைஞர் அவர்கள் முறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 49 ஆண்டுகள் நிறைவுற்று, 50ஆம் ஆண்டு தொடங்குகிறது.

ஓர் மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராகப் பொன்விழா காணும் வாய்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் இணையேதுமில்லாத சாதனைகள் பல புரிந்த தலைவரான நம் அருமைத் தலைவருக்கே வாய்த்திருக்கிறது. இந்தச் சாதனை எளிதாக அமைந்துவிடவில்லை. எத்தனையோ காட்டாறுகள், எண்ணற்ற நெருப்பாறுகள், கணக்கிலடங்கா துரோகங்கள், எதிர்கொள்ளவே முடியாத நெருக்கடிகள், அதிசயிக்கத்தக்க வெற்றிகள், அதல பாதாளத்தில் தள்ளிய தோல்விகள் என அனைத்தையும் கடந்து, தி.மு.கழகம் எனும் இந்த இயக்கத்தை ஆலமரமாக வளர்த்து அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்த பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கே உரியது.

பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி பத்திரிகை நிறுவனராக பவளவிழா, கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டமன்றப் பணிகளில் வைர விழா ஆகியவற்றைக் கடந்து ஓய்வறியாமல் உழைத்த அவருக்கு, காலம் சற்று ஓய்வளித்திருக்கிறது. முதுமையின் காரணமாக அவரது உடல்நலம் குன்றியிருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாக கழகத் தலைவர் என்ற முறையில், என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! எனப் பொங்கும் பெருங்கடலெனத் திரண்ட தமிழ் மக்களை நோக்கி ஒலித்த அந்த காந்தக் குரலை எப்போது கேட்போம் என ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கிறோம்.

காலமும், மருத்துவ அறிவியலும் நம் ஏக்கத்தைத் தணிக்கும் என்ற நம்பிக்கையுடன் தலைவர் கலைஞர் வகுத்துத்தந்த பாதையில் கழகம் பயணிக்கிறது. தலைவர் கலைஞரின் நெஞ்சில் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்பும் இருக்கிறார்கள். ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் தலைவர் கலைஞர் இருக்கிறார்.

இந்தப் பிரிக்க முடியாத சொந்தமும் பந்தமும்தான் அரை நூற்றாண்டுகால அரசியல் தலைமையின் மகத்துவமான தனித்துவம். எப்போதும் இதயத்தில் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் தலைமைப் பொறுப்பின் பொன்விழாவைப் போற்றிக் கொண்டாடுவோம்! அவரது இலட்சியப் பாதையில்-ஜனநாயக வழியில் தொடர்ந்து தொண்டாற்றி, கழக அரசை விரைவில் அமைப்போம்! அந்த வெற்றியை தலைவர் கலைஞருக்குக் காணிக்கையாக்கி, பொன்விழா நாயகரின் புகழைப் புவியெங்கும் எதிரொலிக்கப் பாடிப் பூரிப்படைவோம்” என்று கூறியுள்ளார்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk leader karunanidhi celebrates 50 years golden golden jubilee

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X