இன்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் தி.மு.க.,வை எதிர்க்க நினைக்கின்றனர். அவர்கள் நெருப்போடு போர் தொடுக்க வந்த வீட்டில் பூச்சியை போல் மறைந்து போவார்கள் என பொள்ளாச்சியில் நடந்த நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசியுள்ளார்.
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. பொள்ளாச்சி நகர தி.மு.க செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத் தலைவர் மற்றும் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசுகையில் தி.மு.க.,வின் சாதனை திட்டங்களான விடியல் பயணம், காலை உணவு திட்டம், நான் முதல்வன், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்
தொடர்ந்து பேசிய லியோனி, சமீபத்தில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கோவையில் பாக முகவர்கள் கூட்டம் நடத்தினர். அதில் அக்கட்சி கொள்கை பரப்பு செயலாளர் பேசும் பொழுது தான் சொல்வதை திருப்பி சொல்லுமாறு அறிவுறுத்திவிட்டு, டி விக்க, டி விக்க, டி விக்க என்று தொடர்ந்து முழக்கமிட்டார். என் காதில் டீ விக்க என்று தான் கேட்டது. 2026 க்கு பின் அவர்கள் டீ விக்க தான் போவார்கள். புதிதாக கட்சி ஆரம்பித்த அனைவரும் தி.மு.க.,வை எதிர்க்க நினைக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நெருப்போடு போராடுகின்ற வீட்டில் பூச்சிகளாக மறைந்து போவார்கள். 2026லும் தி.மு.க மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றார்.
இக்கூடத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, நகர மன்ற தலைவர் சியாமளா, தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, வழக்கறிஞர் அதிபதி, ஒன்றிய செயலாளர்கள் ராசு, யுவராஜ், மருதவேல் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.