பெரம்பலூர் பாலியல் விவகாரம் : அதிமுக அரசை சாடி மு.க ஸ்டாலின் அறிக்கை!

யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

mk stalin statement : பெரம்பலூர் பாலியல் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசை சாடி கண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின் அறிக்கை:

கடந்த மாதம் ஒட்டு மொத்த தமிழமத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் தான் பொள்ளாச்சி விவகாரம். கல்லூரி பெண்கள், பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், அவர்களை இளைஞர்கள் சிலர் அடித்து துன்புறுத்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் பெரம்பலூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக தொடர் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் சம்மந்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் இதுக்குறித்து மு.க ஸ்டாலின் கண்டன பதிவு ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “ பொள்ளாச்சி விபரீதம்” முடியும் முன்பே “பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார்” இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளி வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.

250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்ட ஒரு வழக்கினை இவ்வளவு மோசமாக ஒரு அரசு கையாண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையோ, ஆர்வமோ காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் தலைமையிலான இந்த அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவது இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விபரீதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.

மாணவ-மாணவியரின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பார்த்து அஞ்சிய அ.தி.மு.க அரசு, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது” என்று ஒரு அரசு ஆணையை வெளியிட்டது. அதைக்கூட முறையாக வெளியிடாமல் நீதிமன்றத்தின் கண்டனத்தை வாங்கிக்கொண்டது அ.தி. மு.க அரசு.

அந்த அரசு ஆணையைச் செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து, வழக்கினை சி.பி.ஐ.யிடம் கூட இதுவரை ஒப்படைக்க முடியாமல் இந்த அரசு செயலிழந்து நிற்கிறது. அ.தி.மு.க அரசின் அலட்சியத்தைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் “ஏன் வழக்கை இன்னும் நீங்கள் எடுத்துக் கொள்ள வில்லை” என்று சி.பி.ஐ. இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து அ.தி.மு.க அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்தான் “பொள்ளாச்சி” வழக்கில் ஒரு சில குற்றவாளிகளாவது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் முக்கியக் குற்றவாளிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்.

“பொள்ளாச்சி பாலியல் வழக்கை” விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மே 23-ந்தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும். இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close