முதன்முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்ற கலைஞர்... கோபாலபுரத்தில் மறக்க முடியாத நள்ளிரவு!

கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது. குறைந்த ரத்த அழுத்தத்திற்காக தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

நேற்று நள்ளிரவு கோபாலபுரத்தில்  அரங்கேறிய சம்பவம் இதுவரை யாரும் பார்த்திராத ஒன்று.  உடல் நிலை  எவ்வளவு மோசமாக இருந்தாலும்  சக்கர நாற்காலி  கம்பீரமாக அமர்ந்தபடி தனது சொந்த காரில் மருத்துவமனை செல்லும் ஆளுமை முதன்முறையாக ஆம்புலன்சில் ஸ்டெச்சரில் படுத்தப்படி சென்றார்.

இதுவரை தலைவரின் குரலை கேட்டு விசிலடித்த, கைத்தட்டிய  திமுக  தொண்டர்கள் முதன்முறையாக  ஆம்புலன்சுக்கு வழி விட  விசில் அடித்தனர். அந்த 20 நிமிடம்  மொத்த திமுக தொண்டர்களும் ஆடி போய் நின்றனர்.  அதுவரை தலைவர் நன்றாக இருக்கிறார்,  அடையாளம் கண்டு கொண்டார்,  விரைவில் உங்களை காணுவார் என்று  கூறி வந்த திமுக குடும்ப உறுப்பினர்கள் கண்கலங்கி  நின்றனர்.

நேற்று நள்ளிரவு கோபாலபுரத்தில் கடந்த பரபரப்பான நொடிகள்..

திமுக தலைவர் கருணாநிதி சிறுநீர்பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.  அவருக்கு கோபாலபுரம் வீட்டிலேயே கடந்த 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டது. அவரை பல்வேறு கட்சித் தலைவர்களும் திமுக தொண்டர்களும் சந்திக்க திரண்டனர். கருணாநிதியின் குடும்பத்தாரிடம் அவர்கள் நலம் விசாரித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு 12.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை மோசமானது. அவருக்கு ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து காவிரி மருத்துவமனை மருத்துவக்குழு கருணாநிதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஆ ராசா, துரைமுருகன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் கோபாலபுரம் வீட்டிற்கு விரைந்தனர்.

இதைத்தொடர்ந்து கோபாலபுரம் வீட்டிற்கு மின்னல் வேகத்தில் வந்தது காவிரி மருத்துவமனை ஆம்புலன்ஸ். ஆம்புலன்ஸை கண்டதும் அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் நடப்பது என்ன என்று தெரியாமல் திகைத்தனர்.  வீட்டின் மேல் தளத்தில் இருந்து தரை தளத்துக்கு முதல்முறையாக ஸ்ட்ரெச்சர் மூலம் கருணாநிதி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார் . இதனைக்கண்ட ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கண் கலங்கினர். கருணாநிதி, கனிமொழி ஆ ராசா உள்ளிட்டோருடன் வந்த வேகத்தில் மருத்துவமனைக்கு புறப்பட்டது ஆம்புலன்ஸ்.

நூற்றுக்கணக்கான தொண்டர்களின் அழுகுரலில் கோபாலபுரம் கலங்கி நின்றது.கருணாநிதிக்காக காவிரி மருத்துவமனையில் சிறப்பு ஐசியூ வார்டு(SICU) தயார் நிலையில் இருந்தது.    கோபாலபுரத்தை அடுத்து திமுக  தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு படையெடுக்க  ஆரம்பித்தனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள  காவேரி மருத்துவமனை திமுக தொண்டர்களால்  ஸ்தம்பித்தது. அப்போது தான் தொண்டர்களின் காதில் அந்த ஆறுதல் வார்த்தைகள்  காதில் வந்து விழுந்தன ”கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது. குறைந்த ரத்த அழுத்தத்திற்காக தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். சிகிச்சை அளித்த 20 நிமிடங்களில் அவரது உடல் சீராக தொடங்கியுள்ளது. தொண்டர்கள் யாரும் கலங்க தேவையில்லை.”  என்று ஆ. ராசா கூறினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close