/indian-express-tamil/media/media_files/2025/01/26/rgmPpNvNtgkSdB4LCvTh.jpg)
6 லட்சத்து 78 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் வெறும் 64 ஆயிரம் கோடியை தான் மத்திய அரசு திருப்பி கொடுக்கிறது என்று தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
டெல்லியில் தி.மு.க மாணவர் அமைப்பு போராட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். இந்தியா கூட்டணியில் இருக்கின்ற தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருக்கின்ற எல்லா மாநில மக்களும், இது எவ்வளவு பெரிய துரோகம், மாநிலங்களின் அதிகாரத்தை எல்லாம் ஒவ்வொன்றாக மத்திய அரசு எப்படி பறிக்க நினைக்கிறது என மக்கள் கண்டன குரல்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
மீனவர்களுக்கு இலங்கை அரசால் கொடுக்கப்படுகிற துயரங்கள் மற்றும் துன்பங்களைப் போக்கத் தமிழக முதல்வரால் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக எம்.பி.,க்களும் பலமுறை நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு முறையான பதில்களை கொடுப்பதில்லை.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்து இருக்கிறது. யு.ஜி.சி புதிய வரைவு விதியும் மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது. ஆசிரியருக்கு சம்பளம், 100 நாள் வேலைவாய்ப்பு என எதற்கும் நிதி தராமல் ஓரவஞ்சனை செய்கிறது மத்திய அரசு. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்திற்கு ஒரு கண்டன குரல் கூட எழுப்பாமல் மோடி இருந்து வருகிறார்.
மத்திய பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க சார்பில் நேற்று 72 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மாதவரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோபத்தோடு உரையாற்றினார். அணைக்கட்டில் அமைச்சர் துரைமுருகனும், மற்ற இடங்களில் அமைச்சர்கள் தலைமையிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகத்தை மக்கள் பார்த்துகொண்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க சார்பில் எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால் ஏன் இந்த ஓரவஞ்சனை என்று தான்.
எல்லா வகையிலும் ஒன்றிய அரசுக்கு பொருள் ஈட்டி தரக்கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. 6 லட்சத்து 78 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் திருப்பி கொடுப்பது எவ்வளவு என்றால், வெறும் 64 ஆயிரம் கோடி தான். இது எந்த வகையில் நியாயம். அதே நேரத்தில் உத்தரபிரதேசம், பீகார், குஜராத்துக்கு மட்டும் கேட்காமலேயே அள்ளி அள்ளி கொடுக்கிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை என்று தான் கேட்கிறோம்.
இதனைச் சுட்டிக்காட்டும் விதமாக அறிஞர் அண்ணா 1967 இல் ஆட்சிக்கு வந்தபோது சேலம் இரும்பாலை வேண்டும் என எழுச்சி நாள் கொண்டாடி மத்திய அரசின் கவத்தை ஈர்த்தார். அதனுடைய விளைவு சேலத்தில் இரும்பாலை அமைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் இருந்த போது மாநில சுயாட்சிக்காக உரிமைக்குரல் எழுப்பினார்.
நான் ஒரு தமிழச்சி என்று சொல்லும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்ன செய்தார்? அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு ஆர்.எஸ் பாரதி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.