கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை இழந்துள்ள நிலையில், அங்கு பா.ஜ.க பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் பெரும்பான்மையை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலையை சந்தித்த பா.ஜ.க ஆட்சியை இழந்துள்ளது. கர்நாடகா தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: கர்நாடக தேர்தலில் வெற்றி: புதுவை காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ”கர்நாடகத்தின் முடிவு தான், இந்தியாவின் முடிவாக இருக்கும். எந்த தேர்தலிலும் காட்டாத ஆர்வத்தை, கர்நாடகாவில் 27 கிமீ ரோட் ஷோ நடத்தி எல்லாம் பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். எனவே இந்த தேர்தல் முடிவு தான் 2024 தேர்தலில் இந்தியா முழுவதும் இருக்கும் இது எடுத்துக்காட்டு.
குறிப்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க பொறுப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டு கடுமையாக பணியாற்றினார். தேர்தல் முடிவுகள் அவருக்கும் ஒரு பெரிய பாடமாகத் தான் இருக்கும். இப்போது எல்லோரும் என்ன சொல்ல தொடங்கிவிட்டார்கள் என்றால், ஆமை புகுந்த வீடும் அண்ணாமலை போன இடமும் உருப்படாது என்று சொல்கிறார்கள். இதனை பா.ஜ.க.,வின் ஒரு தரப்பினருமே சொல்கிறார்கள். தோல்விக்கு அண்ணாமலையை மட்டும் காரணம் சொல்ல முடியாது என்றாலும், அவரும் ஒரு காரணம். அண்ணாமலை தான் அதி தீவிரமாக செயல்பட்டார். தவறான பிரச்சாரங்களைச் செய்தார். இதற்கு பிறகாவது அண்ணாமலை பொதுவெளியில் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பா.ஜ.க.,வை ஆதரித்த அ.தி.மு.க.,வுக்கும் இந்த தோல்வி ஒரு பெரிய அடி. காரணம் அவர்கள் அறிவித்த வேட்பாளர்களையே, பா.ஜ.க.,வுக்கு ஆதரவளிக்க வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். பா.ஜ.க.,வும் அ.தி.மு.க.,வும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டிலும் இதே கதி தான்.
இந்த தேர்தல் வெற்றி காங்கிரஸூக்கு தேசிய அளவில் சாதகமாக அமையும். அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸை ஏற்றுக் கொள்ளும் நிலையை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. இந்த முடிவுகள் அடுத்து வரவுள்ள மத்திய பிரதேசம், ஜார்கண்ட் தேர்தல்களிலும் எதிரொலிக்கும். 2024 பா.ஜ.க அல்லாத ஆட்சியாக அமையும் என்பது பிரகாசமாக தெரிகிறது. மேலும், பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜ.க அரசை மாற்றலாம் என்பதை கர்நாடகா மக்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் வரை காத்திருக்காமல், இந்த ஆண்டு டிசம்பரிலே தேர்தல் வர வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்க தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.” இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.