தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மகளிரணி சார்பில் நடைபெற்ற ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சென்னை, சேலம், திருப்பத்தூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட அணிகளும், 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூர், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களுக்கு தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பேசியதாவது; லட்சம் பேரைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் படிக்க வைத்து - புதிய சிந்தனையாளர்களை உருவாக்கியிருப்பதன் மூலம் கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. திராவிட இயக்கக் கருத்துகளை இங்கு கூடியிருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில் நடத்தப்பட்ட, "கலைஞர் 100 - வினாடி-வினா" போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
தமிழ்ச் சமுதாயத்தை அடிமைப்படுத்தியவர்களையும், தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்திட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் கேள்வி எழுப்பியவர் கலைஞர். அத்துடன், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி – தமிழ்ச் சமுதாயத்திற்கான விடியலாகவும் - முன்னேற்றத்திற்கான விடையாகவும் இருந்தார்” என்று குறிப்பிட்டார்.
கலைஞர் நூற்றாண்டில் வினாடி-வினா போட்டி நடத்தி, எங்கே திராவிடப் பட்டாளம்? என்று கேட்பவர்களுக்கு இதோ இங்கே என்று அடையாளம் காட்டியிருக்கிறார் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி.
கலைஞர், கட்சி, அரசியல் எல்லைகளைத் தாண்டி இன்றைக்கும் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக – இந்தியாவின் அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்.
பாசத்தைப் பொழியும்போது கனிமொழியாகவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி. நீங்கள் அனைவரும் கனிமொழியின் நாடாளுமன்றப் பேச்சுகளைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்... திராவிட இயக்கத்தின் கொள்கை, சமூகநீதி வரலாறு, சுயமரியாதை சமதர்ம உணர்வுகளோடு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகம் காக்க இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாகச் செயல்பட்டு வருபவர்தான் தங்கை கனிமொழி.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேயில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்தப் போட்டியின் வெற்றி என்பது, புது சிந்தனையாளர்களை உருவாக்குவதுதான். இரண்டு லட்சம் பேரைத் திராவிட இயக்கத்தைப் பற்றிப் படிக்க வைத்ததன் மூலமாக, இந்தப் போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது”.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நிகழ்ச்சிக்குப் பெரும்பங்கு அளித்திருக்கிறார். உண்மைதான், கனிமொழியே இங்கு சொன்னார். நிதித்துறை அமைச்சர் என்கிற காரணத்தாலோ என்னவோ, பெரும்பங்கு அவருக்கு எப்போதும் உண்டு! இவ்வளவு பெரிய போட்டியைத் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது சாதாரண செயல் அல்ல... எப்படி இந்தப் போட்டியை இவ்வளவு சிறப்பாக நடத்தினீர்கள் என்று தங்கை கனிமொழியிடம் நேற்று முன்தினம் கேட்டேன்.. அவருடைய பதில் என்னை மலைக்க வைத்தது..
மேலும், “இது வாட்ஸ்அப் யுகம். வாட்ஸ் அப்பில் யாரோ ஃபார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனில், உண்மையான வரலாறை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும். அதற்கு, இதுபோன்ற போட்டிகள் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.
அருமைச் சகோதரி கனிமொழிக்கு நான் வைக்கும் வேண்டுகோள்... வேண்டுகோள் அல்ல, உரிமையோடு சொல்கிறேன்... இதுபோன்ற கருத்துகளை விதைக்கும் களப்பணியைத் நீங்கள் தொடர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த விழாவில் பேசிய கனிமொழி எம்.பி., கலைஞர் 100 வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்றவர்களைத் திராவிட நட்சத்திரம் என்று அழைக்கப் போகிறோம். இந்த திராவிட நட்சத்திரங்களுக்குப் பரிசளிப்பதற்குத் திராவிட சூரியனே நம் நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டுள்ளார். அந்த திராவிட சூரியனுக்கு என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வினாடி வினா நிகழ்ச்சி என்பது நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்வதற்காக நடத்திக் கொண்டிருக்க கூடிய ஒரு நிகழ்வு. திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கம் இரண்டும் அறிவை வளர்க்கக்கூடிய ஒரு இயக்கம். அதனால்தான் அறிவியல் பூர்வமாக மக்கள் சிந்திக்கக் கூடிய ஆற்றலை வளர்க்க வேண்டும் என நினைக்கிறோம். ஒரு சிலரைபோல அம்பானி, அதானியை வளர்ப்பதற்காக கட்சி நடத்துவதில்லை.
திராவிட இயக்கம் என்பது மக்களுக்குக் கல்வி போய்ச் சேர வேண்டும், சுயமரியாதை போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடும், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இயக்கம். அதற்காகத்தான் தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் போராடியது.
பேரறிஞர் அண்ணா தொடங்கி தலைவர் கலைஞர் வரை, எத்தனையோ கல்லூரிகளைத் திறந்தார்கள். பெண்கள் கல்வி பெறுவதே சிரமமாக இருந்த காலகட்டத்தில் பத்தாவது வரையிலாவது படிக்க வேண்டும் என்பதற்காக படித்தால் திருமணத்துக்கு நாங்கள் திருமண உதவித்தொகை தருகிறோம் என அறிவித்தார். இதன்முலம் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரியில் பெண்கள் எந்த தடையும் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதுதான் தொடக்கத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய திராவிட மாடல் ஆட்சி. திராவிட இயக்கத்தின் சாதனைகள், பணிகள் என்பது அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வுதான் கலைஞர் 100 வினாடி வினா போட்டி.
எந்த மாநிலத்தில் யார் வெற்றி பெற்றால் என்ன, தமிழகம் என்றுமே திராவிட இயக்கத்தின் கையில்தான் இருக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி அரணாகத் தொடர்ந்து இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அது எப்போதும் நிற்கும் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த மண்ணை, நாட்டை காப்பாற்றக் கூடியவர்கள் தமிழர்கள் தான் என்று பேசினார்.
18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபிலன், உதயகுமார், நரேஷ்குமார்; இரண்டாவது பரிசு பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலன், சோஃபியா, மோகன்ராஜ்; மூன்றாவது பரிசு பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், தியாகராஜன், மாதவி நாகமுத்து; நான்காவது பரிசு பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், லட்சுமி, தீரமகாராஜன் வெற்றி பெற்றனர்.
அதேபோல், பதினெட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் பரிசு பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு, சித்தி ஃபர்விஷா, தர்ஷினி; இரண்டாம் பரிசு பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் தங்கேஷ், அஜித்குமார், ஷேக் அமீன்; மூன்றாம் பரிசு பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சனா, ராஜஸ்ரீ, ஸ்ரீநதியா; நான்காம் பரிசு பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகா, வெண்ணிலா, வேல்முருகன் வெற்றி பெற்றனர்.
இந்த போட்டியில் முதலிடத்தைப் பிடித்த அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், இரண்டாம் பரிசு 6 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு 3 லட்சம் ரூபாயும், நான்காம் பரிசு 1 லட்சம் ரூபாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.