இன்னும் 3 நாளில் கொரோனா இருக்காது எனக் கூறி மக்களை ஏமாற்றுவதா?’ மு.க.ஸ்டாலின் கண்டனம்

70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வருந்த வேண்டாம், அவருக்கு வந்தாலும் சிகிச்சை அளிப்போம்" என்று கொடூரமான கிண்டல் அடித்துக் குதூகலம் கொண்டார்.

By: Updated: April 18, 2020, 10:12:13 AM

அரசியல் சுயநலத்துக்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடதீர்! கொரோனா தடுப்பில் இருக்கும் நேரத்தை வீணாக்காமல் செம்மையாகப் பணியாற்றி, தமிழ் மக்களைப் பாதுகாத்திடுவீர்! என்ற மு.க ஸ்டாலின் எழிதிய பிரதான கட்டுரை இன்று( ஏப்ரல். 18) முரசொலி பத்தரிகையில்,  வெளியாகியது.

அந்த கட்டுரையில், மார்ச். 16ம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக தமிழக முதல்வர் கூறிய கருத்துக்களை  கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த 16ம் தேதி,  சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி,”கொரோனா பரவலின் தீவிரத்தை முன்வைத்து 3 வண்ணங்களாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது; அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும். இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும் ” என்று தெரிவித்திருந்தார்.

தனக்குத்தானே முதிகில் தட்டி முறுவலிக்கும் முதலமைச்சர் பதில்:  

முதல்வரின் இந்த கருத்துக்கு பதிலளித்த ஸ்டாலின்,”இன்னும் இரண்டு மூன்று நாளில் கொரோனா இருக்காது’ என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.

”நேற்றைய தினம் 36 பேர்  பாகொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இன்றைய தினம் 25 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியானால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத்தானே அர்த்தம்” என்று கேட்கும் அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1,383 பேரின் முடிவுகள் வரவில்லை என்று அவரே சொல்கிறார். சுமார் 18 ஆயிரம் என்பது தமிழ்நாட்டு மக்கள்தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை அவருக்கு அருகில் விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்ல வேண்டும் என்று தனது கட்டுரையில் பதிலளித்துள்ளார்.

ஆரமபத்தில் துரித நடவடிக்கைகள் இல்லை: மு. க ஸ்டாலின் மேலும், பிப்ரவரி 4ம் தேதி மாநிலப் பேரிடராக கொரோனாவை அறிவித்த கேரளாவுடனான எல்லையை மார்ச் 16ம் தேதி மூடியது தமிழக. இத்தனை நாட்கள் கழித்து மூடியது தான் துரித நடவடிகையா?

மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில்தான் கொரோனா நோய்த் தாக்கம் இருக்கிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது 22 மாவட்டங்களுக்கு அதிகமாகப் பரவிவிட்டது என்றும், மூன்றே மூன்று மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது என்றால், இதுதான் கொரோனாவை  காலத்தே கட்டுப்படுத்திய செயலா?

தட்டித் தட்டி எழுப்பியும் மறுத்து, மிகவும் தாமதமாக விழித்தெழுந்துவிட்டு, மருத்துவ ரீதியாக முறையான தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களைப் பெறுவதில் அலட்சியம் காட்டிவிட்டு, இப்போது கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வருந்த வேண்டாம், அவருக்கு வந்தாலும் சிகிச்சை அளிப்போம் : 

பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் தொடக்கத்திலும் என்ன செய்து கொண்டு இருந்தார் முதல்வர்? சட்டப்பேரவையில் நான் குரல் எழுப்பியபோது, “தமிழகத்தில் ஒருவருக்குக் கூட கரோனா வராது, வரவிடமாட்டோம்” என்று மார்தட்டினார். “70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வருந்த வேண்டாம், அவருக்கு வந்தாலும் சிகிச்சை அளிப்போம்” என்று கொடூரமான கிண்டல் அடித்துக் குதூகலம் கொண்டார்.

“வயதானவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மட்டும்தான் வரும்” என்றார், அனைத்தையும் ஐயம் திரிபற அறிந்த சுகாதார அமைச்சர்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து ரகசியமாக வைத்திருப்பதைப் போலவும், யாருக்கு வந்தாலும் அடுத்த நிமிடமே அதை வெளியிட்டுக் காப்பாற்றிவிடுவோம், என்பது மாதிரியும் அல்லவா முதல்வரும், அமைச்சரும், கிண்டலும் கேலியும் பேசினார்கள்! ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மூன்றாவது இடம் தமிழகம். விலை மதிப்பில்லாத 15 உயிர்களை இழந்திருக்கிறோம்; 1,264 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்; இதில் 30-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.

அனைத்துக்கும் மேலாக சிகிச்சை கொடுத்து வந்த மருத்துவர்களில் பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இன்னும் எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற தரவுகளே தெரியவில்லை; திரைமறைவு ரகசியமாக உள்ளது.

காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் : 

முதலமைச்சருக்கும் கொரோனா நோயின் அடிப்படை குணத்தை உணர்த்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை சொல்வதற்கும் தான், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மன்றாடினேன். அவர் செவிசாய்க்கவில்லை.

நேரில் சொல்ல வேண்டிய ஆலோசனைகளை கடிதமாக அனுப்பினேன். கருத்துக்களில் கவனம் செலுத்தாமல், ” மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், நாடகம் ஆடுகிறார், அரசியல் செய்கிறார்” என்று தாக்கி அறிக்கை வெளியிட்டு இன்பம் கண்டார் முதல்வர்.

அவர் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நான் தடை போட நினைப்பதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த அரசு எடுத்த எந்த நடவடிக்கைக்கும் நான் தடையாக இருந்தது இல்லை. “ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருப்பேன்” என்றுதான் அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தால் தானே ஆதரிக்க முடியும்? அரைகுறை நடவடிக்கைகளை நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்.

ரேப்பிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவிகள் மார்ச் 9-ம் தேதி வந்துவிடும் என்றார், 10-ம் தேதியே ஒரு லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்துவிடுவோம் என்றார். அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து 13 ஆயிரம் கோடி பணம் கேட்டார். வந்ததோ வெறும் 800 கோடி.

ஆனால், மத்திய அரசிடம் இருந்து பணம் பெற தைரியமும் இல்லை, தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் இல்லை. இந்த கோழைத்தனத்தை மறைக்க, ‘திமுக எம்.பி.,க்கள்தானே வாதாடி வாங்கித்தர வேண்டும்? மத்திய அரசை வற்புறுத்தினார்களா? ஏதாவது ஸ்டெப் எடுத்தார்களா?” என்று வக்கணையாகக் கேட்டுள்ளார் முதல்வர்.

தமிழக அரசு கேட்ட நிதியைத் தர வேண்டும் என்று மூன்று அறிக்கைகளை நான் வெளியிட்டுள்ளேன். பிரதமர் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதனைக் கோரிக்கையாக வைத்து வலியுறுத்தினார். எழுத்து மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார். இதை எல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா? மறைக்கிறாரா?

மத்திய அரசிடம் வாதாடுவதன் பெயர்  அரசியல் அல்ல; அக்கறை!     

நோயில் நான் அரசியல் செய்வதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அடையாளம் காணப்படாத ‘கூவத்தூர் நோயினால் நடந்த அரசியல் விபத்தால்’ முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நாடு மறந்துவிடாது.

கொரோனாவில் நான் அரசியல் செய்வதாக இருந்தால், முதல்வருக்கு எந்த ஆலோசனையும் சொல்லாமல் வாய்மூடி இருந்திருக்க வேண்டும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்காமல் இருந்திருக்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் இருந்தால்தான் அரசியல் செய்வதாக அர்த்தம்.

மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல; அக்கறை.

தமிழ்நாட்டு மக்கள் மீதான தணியாத அக்கறையில்தான் திமுக எப்போதும் செயல்படுகிறது. அந்த நல்லெண்ணத்தையும் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்றைய முதல்வருக்கு இல்லை; என்ன செய்வது தமிழகம் செய்த தவப்பயன்!

காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’ என்பது போல திமுக சார்பில் நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட எடப்பாடி பழனிசாமிக்குக் குறைகளாகத் தெரிகின்றன” என்று மு.க ஸ்டாலின் தனது கட்டுரையில் பதிலளித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk leader stalin rebuttal to edappadi palanisamy coronavirus statement

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X