திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி திருவுருவச் சிலைக்கு அவரது 153-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பேசிய அவர், எங்களது கூட்டணி மிகச் சரியான கூட்டணி, கூட்டணி குறித்து நான் லால்குடியில் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் தற்போதைய கூட்டணியை, எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். 38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சியமைத்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார்.
அதைப்போல, கலைஞர் இல்லாத சூழலிலும் எங்கள் தலைவர் ஆட்சியை பிடித்ததையும், வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தொடர எந்த நிலை வந்தாலும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றுதான் பேசினேன். அதை மாற்றி போட்டு விட்டார்கள். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமூகமாக பழகுகின்றனர் என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் லால்குடியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, மக்களவைத் தோ்தல் கூட்டணி போல், 2026 சட்டப்பேரவை தோ்தலில் கூட்டணி அமையும் சூழல் இல்லை என்று பேசியது பேசு பொருளாகியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“