/indian-express-tamil/media/media_files/2025/11/02/sir-resolutions-2025-11-02-13-32-05.jpg)
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்... அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Summary Revision - SSR) நாளை மறுநாள் (நவ.4) முதல் தொடங்கும் என அறிவித்துள்ள நிலையில், இதனை எதிர்த்து தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இன்று (நவ.2) அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தின. இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழக மாவட்ட ஆட்சியர்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் செயல்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆனாலும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்வது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், வாக்காளர்களுக்கு சிரமமாக இருக்கும் என்றும்கூறி, இப்பணிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. இக்கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காத நிலையில், திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று (நவ.2) காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில், தி.மு.க தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க 64 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
தி.மு.க.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு.
கூட்டணிக் கட்சிகள்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன்.
மற்றவர்கள்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா உட்படப் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. (டாக்டர் அன்புமணி) ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அழைக்கப்பட்ட கட்சிகளில் விஜய்யின் த.வெ.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்), நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார். அதன்பிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்த காலகட்டத்தில் நடத்துவது சரியல்ல என்றும், அவற்றை தள்ளி வைக்க வேண்டும் என்றும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.
வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்க மறுக்கவில்லை. ஆனால், அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து, நடைமுறைச் சிக்கல் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக்கொண்டு, இப்போது இதை செய்யத் தொடங்குவது முறையானது அல்ல. எஸ்.ஐ.ஆர். (SIR) என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித்திட்டம் இதில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இதுபோன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. குறைகள் களையபட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடித்து 2026 தேர்தலுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த வேண்டும். அதன் அடிப்படையில், ஜனநாயகத்திற்கு முரணான, சட்டவிரோதமான எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பீகாரில் நடந்த குளறுபடிகள் எதையும் களையாமல், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது ஜனநாயகத்தையே அடியோடு குழிதோண்டி புதைப்பதாக ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us