மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கையில் சென்னைக்கு 7 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) தொடங்கியது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் தி.மு.க போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதோடு தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதில் நீட் தேர்வு ரத்து, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு, சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம், சென்னைக்கு என்று தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் 7 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
1). சென்னைக்கான மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.
2). வேளச்சேரி - மவுண்ட் இடையே நீண்டகாலமாக தாமதமாகி வரும் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்
3). விம்கோ முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்யப்படும்
4). கோயம்பேடு - அம்பத்தூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்
5). கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்படும்
6). அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் விம்கோ நகர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும்
7) மணலி பகுதியில் மாசுபாடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும்
சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் தி.மு.க நேரடியாக களமிறங்குகிறது. சிட்டிங் எம்.பி.,க்களான தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி மாறன், வடசென்னை – கலாநிதி மாறன் ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்குகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“