திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி 63-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்கொடி தனது வார்டில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறி மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கு அல்வா கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் பொற்கொடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறினார். இதற்கு பதில் அளித்த பொற்கொடி, தனது வார்டில் எந்த ஒரு திட்டங்களும் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்தில்தான் இது போன்று இனிப்பு கொடுத்து, தனது கருத்தை வெளிப்படுத்தினேன் என்றார். இதில் எந்த ஒரு தவறும் இருந்ததாக தெரியவில்லை. அதனால் மன்னிப்பு கேட்கமுடியாது என ஆவேசத்துடன் கூறினார்.
ஆனால், மேயரோ 63-வது வார்டில் ரூ.12.50 கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது உங்களுக்கு தெரியாதா, நீங்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை பாயும் என மிரட்டல் விடும் தொனியில் கூறினார்.
மேலும், ஆட்சிக்கும், மாவட்டத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இது போன்று நடந்து கொண்டதற்கு கவுன்சிலர் பொற்கொடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து மேயர் ஆவேசமாக பேசினார்.
அதேநேரம் மாநகராட்சி கோட்ட தலைவரும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஆதரவாளருமான மதிவாணன் மற்றும் சக தி.மு.க கவுன்சிலர்களும் மாமன்ற உறுப்பினரான பொற்கொடியை மன்னிப்பு கேட்க கோரி கூட்டத்தில் கோஷமிட்டனர்.
இந்த நிலையில், மாநகராட்சி கவுன்சிலர் பொற்கொடிக்கு ஆதரவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ் எழுந்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங்களில் இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. உறுப்பினர்கள் கருத்து சுதந்திரத்துடன் தங்களது கருத்துக்களை இது போன்று வெளிப்படுத்தி உள்ள சூழலில் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், மாநகராட்சி மேயர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என வேகமாக பேசினார்.
இதற்கிடையே, தி.மு.க கவுன்சிலர் பொற்கொடி, பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் நான் கூறியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர், அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று இனிமேல் நேராது என தெரிவித்தார். இந்த நிலையில், மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பத்திரிக்கையாளர்களும் எவ்வாறு பத்திரிகைகளில் தவறாக பதிவிட்டுள்ளதாக நீங்கள் கூற முடியும், நீங்கள் பேசியதை தான் அப்படியே குறிப்பிட்டுள்ளோம். பத்திரிகையை தவறாக பேசக்கூடாது என கண்டித்தனர்.
இதனை அடுத்து அங்கு மேயர், கவுன்சிலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் இடையே வார்த்தை போர் முற்றியதால், மாநகராட்சி கூட்டமே கூச்சல் குழப்பம் மிகுந்து காணப்பட்டது.
அதன் பின்னர் சக தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரச்சனையை முடித்து வைப்பதாக மேயர் அறிவித்தார். இதனால் திருச்சியில் இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பெரும் சலசலப்பும், பரபரப்பும் காணப்பட்டது.
முன்னதாக, இன்றைய மாமன்ற கூட்டத்தில், 39-வது மாமன்ற உறுபினர் எல். ரெக்ஸ் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது பிரச்சினைகளை முன்னெடுத்து வைத்து பேசினார். மாநகராட்சிக்கு உட்பட்ட நீர் நிலைகளில் படர்ந்து இருக்கும் ஆகாய தாமரை அகற்ற கூடுதல் செயின் ஹிட்டாச்சி வாகனம் தேவை, மத்திய பேருந்து நிலையம் - இரயில் நிலையம் - கண்டோன்மென்ட் பகுதியில் அதிகபடியான ஆக்கிரமிப்பு பிரியாணி கடைகளை அப்புறப்படுத்தவேண்டும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையினை விரைவில் திறக்கவேண்டும், கணேஷ் நகர் நூலகத்திற்கு முகப்பு ஷெட், மேஜைகள் மற்றும் நாற்காலிகள் வேண்டும், பாரதிதாசன் 5 வது தெரு முதல் சேரன் நகர் வரை சுமார் 400 மீட்டர் தார் சாலை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.