திமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா?’

திமுக.வில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக ஊடகங்கள் நேர்காணல் செய்ய விரும்புவது அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனைத்தான்!

By: October 15, 2018, 5:09:24 PM

திமுக சார்பில் ஊடக நேர்காணல் பங்கேற்பாளர்களின் புதிய பட்டியல் வெளியானது. இதில் துரைமுருகன் பெயரே இல்லை.

திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் பெயர் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் தற்போது ஊடக விவாதங்களில் பங்கேற்கும் டி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கான்ஸ்தந்தின் ரவீந்திரன், தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சரவணன், கண்ணதாசன், அப்பாவு, ஆஸ்டின், கவிஞர் சல்மா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றன.

புதிதாக தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்யாத முயற்சியாக திமுக சார்பில் விவாதங்களை தவிர்த்து தனி நேர்காணலில் பங்கு பெறுவோர் பட்டியலையும் தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கிறது. இன்று (அக்டோபர் 15) வெளியான அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:

DMK Media Interview Participants, DMK Announced New List, திமுக ஊடக நேர்காணல் பங்கேற்பாளர்கள் புதிய பட்டியல் திமுக ஊடக நேர்காணல் பங்கேற்பாளர்கள் புதிய பட்டியல்

1. க.பொன்முடி (உயர்நிலைக் குழு செயலாளர்)
2. ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர்)
3. ஆ.ராசா (கொள்கைப் பரப்பு செயலாளர்)
4. டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக செய்தி தொடர்புக் குழு செயலாளர்)
5. ஜெ.அன்பழகன் (சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்)
6. டி.எம்.செல்வகணபதி (தேர்தல் பணிக்குழு செயலாளர்)
7. பழ.கருப்பையா (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

திமுக சார்பில் தனி நபராக ஊடகங்களில் நேர்காணலில் பங்கேற்க மேற்கண்ட 7 பேருக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களைத் தவிர, வேறு யாரும் தனி நேர்காணல்களில் இனி பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

பொதுவாக திமுக.வில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக ஊடகங்கள் நேர்காணல் செய்ய விரும்புவது அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனைத்தான்! காரணம், தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகள், அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் அவர்! தவிர, கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்து சுவாரசியமாக பதில் அளிக்கக்கூடியவர்! அவர் இந்தப் பட்டியலில் இடம் பெறாதது ஊடகங்களுக்கு ஏமாற்றம்!

திமுக மகளிரணி செயலாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற அடிப்படையில் கனிமொழி தமிழ் ஊடகங்களில் மட்டுமல்ல, தேசிய ஊடகங்களிலும் நேர்காணல் அளிப்பவர்! கட்சி இப்படி ஒரு பட்டியலை அறிவித்தபிறகு, அதில் இடம் பெறாத அவர் இனி அப்படி நேர்காணல் அளிக்க முடியுமா? எனத் தெரியவில்லை.

அதேபோல நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடர்பான விவாதங்கள், நேர்காணல்களுக்கு ஊடகங்கள் தேடுகிற இன்னொரு நபர், திருச்சி சிவா! அவருக்கும் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

திமுக முதன்மைச் செயலாளராக அண்மையில் அங்கீகாரம் பெற்ற டி.ஆர்.பாலு, சீனியர் மாவட்டச் செயலாளர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை விவகாரங்களை துல்லியமாக பேசும் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் தனி நேர்காணல் பங்கேற்பாளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததில் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

பட்டியலை விரிவு படுத்துவாரா மு.க.ஸ்டாலின்?

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk media interview participants list durai murugan did not get place

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X