முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது!

இபிகோ 203, 504, 294 (b), 506(i) உள்ளிட்ட 4 பிரிவுகளில் லோகநாதன் மீது வழக்குப் பதிவு

முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பற்றி சமூக தளத்தில் அவதூறு பரப்பியதாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்புபவர்களை காவல்துறை தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. பிறர் குறித்து தவறான கருத்துகளைப் பரப்புபவர்கள், வதந்திகளைப் பதிவிடுபவர்கள், சாதி, மத மோதல்களைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்பவர்கள் ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வழக்குப்பதிவு செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், சின்னதாராபுரத்தை சேர்ந்த லோகநாதன், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அரவக்குறிச்சி தொகுதிக்கான நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சமூகவலைதளத்தில் கேலியாக சித்தரித்தும், அவதூறு மற்றும் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பியதாகவும் அதிமுகவின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதுசூதன் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக, இபிகோ 203, 504, 294 (b), 506(i) உள்ளிட்ட 4 பிரிவுகளில் லோகநாதன் மீது வழக்குப் பதிவு செய்து, சின்னதாரபுரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் எச்சரித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close