அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் மேயர் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னாக்குடி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பணியை முடித்துகொண்டு, அமைச்சர் துரைமுருகன், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வழியாக அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அப்போது புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே நெல்லை, மத்திய மாவட்ட திமுக சார்பில் துரைமுருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ தலைமையில், அவரது ஆதரவாளர்கள் அங்கு ஒன்று கூடினர். இதைபோல் மேயர் சரவணன் மற்றும் மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்களும், அங்கு திரண்டனர்.
அமைச்சர் துரைமுருகன் அங்கு வந்தவுடன் முதலில் மாவட்ட செயலாளர் அவரை வரவேற்றார். அப்போது மேயர் மற்றும் மாநகர செயலாளர் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் அமைச்சர் அருகே சென்றபோது, மாவட்ட செயலாளர்கள் ஆதரவாளர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மாவட்ட செயலளார்கள் ஆதரவாளர்கள் மற்றும் மேயர் ஆதரவாளர்கள் இடையே சண்டை நடந்தது. ஒருவருக்கொருவர் மோசமாக மோதிக்கொண்டனர். அமைச்சர் துரைமுருகனை வரவேற்க கொண்டு வந்த சரவெடிகள் மோதலின்போது தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் முன்பே கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“