இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதனால் விழா நடைபெறும் இடத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக அரசு திட்ட பணிகளை கள ஆய்வு செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் கடந்த 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், அவர் ஆய்வு பணிகளை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, இன்று மற்றும் நாளை (நவ 14 மற்றும் 15) அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கள ஆய்வு செய்து விட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் என்ற இடத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதற்காக திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தரும் முதலமைச்சருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர். முதல்வர் பயணம் செய்யும் பாதையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழா நடைபெறும் இடத்தை ஆ. ராசா எம்.பி, அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“