/indian-express-tamil/media/media_files/2025/09/29/anbil-mahesh-anbumani-2025-09-29-20-35-36.jpg)
'அமைச்சருக்கு ஆஸ்கர் கொடுக்கணும்'... விமர்சித்த அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதில்
கரூர் துயர சம்பவத்தைக் காரணமாக வைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்த விமர்சனத்துக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
இன்று விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஒருவரைக் குறிப்பிட்டு பேசினார். "கரூர் துயரச் சம்பவத்தை வைத்து இவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஓர் அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கெல்லாம் ஆஸ்கர் விருதுதான் கொடுக்க வேண்டும். மக்களை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது" என்று அவர் விமர்சித்திருந்தார்.
அன்புமணி ராமதாஸின் இந்தக் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அவரது பதிவில் உள்ளதாவது, "மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.""கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!"
"எங்கள் தலைவர் முதலமைச்சர் சொல்வதுபோல 'எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!' தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்." "வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்," என்று அன்பில் மகேஸ் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.