சர்ச்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ்: ‘திமுக அலுவலகத்திற்கு கலெக்டர்- எஸ்.பி-யை அழைத்து கூட்டம் நடத்துவதா?’

அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் பங்கேற்றிருந்த நிலையில், கூட்டமானது திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை வீழ்த்தி திருவெரும்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளை அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்டத்தில், நேற்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக திமுக அலுவலகத்தில், ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் தலைமையிலான அந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சுப்ரமணியன், திருச்சி காவல்துறை ஆணையர் அருண் ஆகியோரும் பங்கேற்றனர்.

அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் பங்கேற்றிருந்த நிலையில், கூட்டமானது திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் அழைத்தால் கூட, கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடத்தப்படுகிறது, வர இயலாது என அதிகாரிகள் தெரிவித்திருக்க வேண்டும் என, சில அரசு அதிகாரிகள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து, பாஜக வை சேர்ந்த காயத்தி ரகுராம், ‘ஆட்சி அதிகாரத்திற்கு வந்த 10 நாட்களில் மாவட்ட கலெக்டரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் கட்டாயப்படுத்தி தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கொரானா ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அதிகார துஷ்பிரயோகம் செய்து தவறான முன்னுதாரணம் ஏற்படுத்திய இவரை தமிழக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk minister anbil mahesh poyyamozhi collector sp trichy meets party office controversy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com